×

திருப்பதி கோயிலில் கைசிக துவாதசி சூரிய உதயத்துக்கு முன் உக்ர சீனிவாசமூர்த்தி வீதி உலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி சூரிய உதயத்திற்கு முன் உக்ர சீனிவாசமூர்த்தி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்டத்தில் இருக்கும் மகா விஷ்ணு ஆடி மாதம் ஏகாதசி அன்று நித்திரைக்கு சென்று கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று நித்திரையில் இருந்து கண் விழிப்பதாக ஐதீகம். அவ்வாறு மகா விஷ்ணு கண் விழிக்கக்கூடிய நாள் கைசிக துவாதசியாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் கைசிக துவாதசி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கைசிக துவாதசியான நேற்று ஏழுமலையான் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் உள்ள உக்ர சீனிவாச மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சூரிய உதயத்திற்கு முன்னதாக அதிகாலை நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் உட்பட பலரும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Siva Nilasamurthy Road ,sunrise ,Tirupati temple ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.3.09 கோடி காணிக்கை