×

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க அனுமதிக்க கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து 17ம் தேதி நடக்கவுள்ள 16வது கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்மொழிந்துள்ளது. இது, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை மிகுந்த வேதனை அடைய செய்துள்ளது. குடிநீருக்கும், பாசனத்துக்கும் காவிரி நீரைத்தான் தமிழகம் அதிகம் நம்பி இருக்கிறது.நீண்டகால சட்ட போராட்டத்துக்கு பிறகுதான் காவிரி நீர் விவகாரத்தில் தீர்வு கிடைத்தது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவு, நாங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றாலும்கூட, ஒதுக்கப்பட்ட பங்கீட்டை வைத்து மேலாண்மை செய்து வருகிறோம். அதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், அது எங்களை மிகவும் பாதிப்படைய செய்துவிடும். எனவேதான் இது எங்களின் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று பிறப்பித்த உத்தரவுகளை மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமல்படுத்த வேண்டும். அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளை அந்த ஆணையம் மேற்கொள்ள கூடாது. ஆனால் 16வது கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை சேர்த்திருப்பது, மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை பற்றி விவாதிக்கலாம் என்றும் அதற்கு ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறிய கருத்தின் அடிப்படையிலானது என்று கூறப்படுகிறது. இது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. மேலும், இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகவும், தமிழகத்தினால் ஏற்க முடியாததாகவும் உள்ளது. மேலும், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 3 வழக்குகள் மீதான விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்னையை எடுப்பது அநீதியானதாகும். கடந்த 7ம் தேதி மற்றொரு வழக்கையும் நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். எனவே மேகதாது விவகாரத்தை பற்றி விவாதிப்பதற்கு ஆணையம் அவசரம் காட்டுவதை நாங்கள் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் எங்களின் மனுக்கள் பற்றிய விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பதாகவே இந்த நடவடிக்கையை எடுப்பது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை திசை திருப்புவதாக அமைந்துவிடும். எனவே, உச்ச நீதிமன்றத்தில் எங்களின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அதில் முடிவு கூறப்படும் வரை மேகதாதுவின் விரிவான திட்ட அறிக்கையை பற்றி விவாதிப்பதை தள்ளிப்போட வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருக்கு இதுதொடர்பான தகுந்த அறிவுரையை வழங்கும்படி ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு நீங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்….

The post உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க அனுமதிக்க கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Caviri Management Commission ,Cloudadu Dam ,Supreme Court ,PM Modi ,Chief Minister of Justice ,G.K. Stalin ,Chennai ,Tamil Nadu Government ,Chief Minister ,Modi ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்