×

சென்னை ராயபுரம் மண்டலத்தில் பயனற்ற டயர்களில் பூந்தொட்டிகள்: மாநகராட்சி அதிகாரிகள் அசத்தல்

சென்னை: சென்னையை அழகுப்படுத்தும் நோக்கத்தோடு மாநகராட்சி சார்பில் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ெசன்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் சாலையோர சுவர்களில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடிசை  மாற்று வாரியக் குடியிருப்புகள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள்,  பூங்காக்கள், அரசு பொதுக் கட்டிடங்கள், மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள  தூண்களில் என வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.  பெண்கள் விவசாய வேலை  செய்வது போன்றும், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தேயிலையைப் பறிப்பது  போன்றும், பெண்கள் வாகனம் ஒட்டுவது ,கோலங்கள் போடுவது போன்றும் ஓவியங்கள்  மிக நேர்த்தியாக வரையப்பட்டு உள்ளன. மேலும் விலங்குகள், காடுகள், பறவைகள்,  பூக்கள், நாட்டின் புராதனச் சின்னங்கள் ஆகியவையும் வரையப்பட்டுள்ளன.இதேபோல், சாலையோரம், சென்டர் மீடியன்கள் மற்றும் கால்வாய் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சாலையோர மரங்களில் பச்சை, மஞ்சல் வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுபோல் பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ராயபுரம் மண்டலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பயனற்ற பழை டயர்கள், பாட்டில்கள், மின்சார பல்புகளில் செடிகளை வளர்த்து அலங்கார பொருள்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குப்பைகளிலிருந்து சேகரிக்கப்படும் டயர்களை சுத்தம் செய்து, வண்ணம் தீட்டி, டயரின் உள்ளே உள்ள இடைவெளியில் மண் நிரப்பி செடிகளை நட்டுள்ளனர். டயரின் மேற்பகுதியில் இரண்டு துளையிட்டு அதில் கயிற்றைக் கொண்டு கட்டி அலுவலக சுவர் மற்றும் பூங்காக்களில் அழகாக தொங்கவிட்டுள்ளனர். இது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.இதுகுறித்து ராயபுரம் மண்டல உதவி செயற்பொறியாளர் பழனி கூறுகையில், ‘‘பயனற்ற பழைய பொருட்களை மறு சுழற்சி செய்யும் வகையில், இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வீசி எறியும் பயனற்ற பொருள்களை அலங்கார பொருள்களாக மாற்றி வருகிறோம். குறிப்பாக டயர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பல்புகள் உள்ளிட்டவற்றை மறுசுழற்சி செய்து அலங்காரப் பொருட்களாக மாற்றி வருகிறோம். வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இதுபோன்ற தயாரிக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. பொதுமக்களும் இதுபோன்று தங்களது வீடுகளில் தயார் செய்யலாம். இதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம், வீட்டையும் அழகுப்படுத்தலாம். மாநகராட்சி சார்பில் டயர் பூந்தொட்டி அதிக அளவில் செய்யப்பட்டு, வார்டு அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பூங்காக்களில் வைத்து அழகுப்படுத்தப்பட உள்ளோம்,’’ என்றார்….

The post சென்னை ராயபுரம் மண்டலத்தில் பயனற்ற டயர்களில் பூந்தொட்டிகள்: மாநகராட்சி அதிகாரிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai Rayapuram ,Chennai ,Chesannai Corporation ,Chennai Raipuram ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...