×

ஆவடி மாநகராட்சி சுடுகாட்டில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

ஆவடி: ஆவடி மாநகராட்சி சுடுகாட்டில் 11 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு செல்லும் சாலையில் ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகன மேடையுடன் கூடிய சுடுகாடு உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 2.75 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட இந்த சுடுகாட்டை தனியார் அமைப்பினர் பராமரிக்கின்றனர். இங்கு பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் மற்றும் அயப்பாக்கம் பகுதிகளில் இருந்து சடலங்கள் தகனம் செய்ய கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா உச்சம் அடைந்த காலங்களில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 382 உடல்கள் என நாள் ஒன்றிற்கு 13 மேற்பட்ட உடல்கள் தினமும் தகனம் செய்யப்பட்டது. சடலங்களை தகனம் செய்ய எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர் பயன்படுத்துவதால், ஒரு உடலை தகனம் செய்ய 15 நிமிடங்கள் வரை ஆகும். கடந்த 11 ஆண்டுகளாக இங்கு 6 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அரசிடம் இருந்து நியாயமாக கிடைக்கவேண்டிய எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. கொரோனா காலத்தில், இந்த 6 ஊழியர்கள், வீட்டிற்கு செல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்ட சடலங்களை முகம் சுளிக்காமல் தகனம் செய்துள்ளனர்.  அரசு மருத்துவமனையில் இருந்து வரும் சடலங்கள் துணிகளால் சரிவர காட்டாமல் கொண்டு வருகின்றனர். அந்த சடலங்களை கையாளும்போது, ரத்தம் தரையில் சொட்ட சொட்ட தகனமேடைக்கு கொண்டு எரியூட்டுகின்றனர். கொரோனா காலத்தில் அயராது உழைத்த இவர்களை அரசும் கண்டு கொள்ளவில்லை என்பது வேதனையின் உச்சம். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இங்கு வந்து பார்வையிட்டு இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். கொரோனா கட்டுக்குள் வந்ததும், நவீன எரிவாயு தகன மேடையை ரூ40 லட்சம் செலவில் அரசு மறுசீரமைப்பு செய்தது. அதன்பிறகு அங்கு பார்வையிட வந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அரசு ஊழியர்களாக மாற்றி சடலங்களை இலவசமாக தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். தற்போது ஒரு உடலை தகனம் செய்ய ரூ2500 மற்றும் காரியம் செய்ய ரூ1,600 வசூலிக்கப்படுகிறது. இப்படி, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் தெரிவித்து பல மாதங்களாகியும் இன்றும் யார் முகமும் கோணாமல் சேவை செய்யும் இந்த ஊழியர்கள் அரசு ஊழியர்களாக மாற்றவில்லை. இதனால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள், மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி ஆணையர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இங்குள்ள ஊழியர்கள் பணிக்கு உத்தரவாதம் அளித்து, அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post ஆவடி மாநகராட்சி சுடுகாட்டில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aavadi Corporation Crematorium ,Aavadi ,Aavadi Corporation ,crematorium ,Dinakaran ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...