×

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்

ஆட்டையாம்பட்டி: காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம் காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சூரசம்ஹார திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. காளிப்பட்டி, ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், காகாபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதலே கோயிலில் குவிந்தனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கந்தசாமி எழுந்தருள, எதிரில் சூரபத்மனை தூக்கி வைத்தனர்.  பக்தர்களின் ‘அரோகரா’, ‘வெற்றிவேல்’, ‘வீரவேல்’ கோஷங்கள் முழக்கத்தில் முருகன், சூரபத்மனை சக்திவேல் கொண்டு அழித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்கள் விளை நிலங்களில் விளைந்த பயிர்களை வீசி எரிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் இன்று காலை மயில் வாகனத்தில் கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து மாலையில் தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஊஞ்சல் பாலி உற்சவத்துடன் சூரசம்ஹார விழா நிறைவு பெறும். காளிப்பட்டி கந்தசாமி கோயில் சூரசம்ஹாரம் விழாவையொட்டி சேலம், நாமக்கல், சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் காளிப்பட்டிக்கு இயக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் அம்பிகாதேவி, செயல் அலுவலர் சுதா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Kalasipatti Kandasamy Temple ,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்