×

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பம்ப் செட் பழுதுநீக்கும் மையம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்டம் செயல்படுத்தி வருகிறது. எனவே, விவசாயிகள் தங்களது வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்களது விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும் விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளின்றி குறித்த நேரத்தில் செய்திடவும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இந்த மையங்கள் 8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக 4 லட்சம் மானியம் வழங்கப்படும். இந்த மையங்களை அமைக்க போதிய இடவசதியும் மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு மையம் மானியத்தில் அமைத்து தரப்படும். மையங்கள் அமைக்க தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறியாளரால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். சம்மந்தபட்ட உதவி செயற் பொறியாளர் மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானிய தொகையினை பயனாளிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். விவரங்களுக்கு செயற்பொறியாளர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, பெரியகுப்பம், திருவள்ளூர் தொலைபேசி – 044-27663843, திருவள்ளூர் உதவி செயற்பொறியாளர், செல்போன் – 9443957921, திருத்தணி மற்றும் பொன்னேரி, உதவி செயற் பொறியாளர், செல் – 9789597447 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்….

The post விவசாயிகள் பயன்பெறும் வகையில் பம்ப் செட் பழுதுநீக்கும் மையம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pump Set Repair Center ,Tiruvallur ,Collector ,Alby John Varghese ,Tamil Nadu Government Department of Agricultural Engineering ,National Agricultural ,Pump Set Repair ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...