×

பைக் ரேஸில் விபரீதம் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் பலி-விபத்துக்கு காரணமான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

சென்னை : தோழியை பார்க்கச் சென்ற ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரின் ஸ்கூட்டர் மீது அதிவேகத்தில் வந்த ரேசரின் பைக் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெண் காவல் ஆய்வாளர் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி இறந்தார்.சென்னை, அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவதனம் (63) ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி. இவரது மனைவி செல்வகுமாரி (61) ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவர் நேற்று முன்தினம் இரவு வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள காவல் குடியிருப்பில் தோழியை பார்க்க சென்று விட்டு பின்னர் நேற்று அரும்பாக்கம் செல்வதற்காக வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மண்ணிவாக்கம் அருகே வந்தபோது, பின்னால் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிள் செல்வகுமாரி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.பைக் ரேஸில் ஈடுபட்ட பூந்தமல்லி, பத்மாவதி நகரைச் சேர்ந்த விஸ்வா (22) என்பவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  அவரது பின்னால் உட்கார்ந்து வந்த அவரது நண்பரான வண்டலூரைச் சேர்ந்த சரவணன் (21) என்பவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பைக் ரேஸில் ஈடுபட்ட மற்ற வாலிபர்கள் தப்பி சென்று விட்டனர்.விபத்தில் உயிரிழந்த செல்வகுமாரியின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து,  போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயரங்கன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், வண்டலூரைச் சேர்ந்த சரவணனை நேற்று காலை பூந்தமல்லியில் இருந்து வந்த அவரது நண்பர் விஸ்வா தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு நண்பர்கள் ஆறு பேருடன் மூன்று இருசக்கர வாகனங்களில் பூந்தமல்லி நோக்கி சென்றதும், அப்போது வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே வந்தபோது மூன்று வாகனங்களில் வந்த அவர்கள் ரேசில் ஈடுபட்டதும்,  அப்போது மண்ணிவாக்கம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதும், அப்போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.விஸ்வா மற்றும் சரவணன் ஆகியோர் விபத்தில் சிக்கியதை அறியாமல் மற்ற இரண்டு வாகனங்களில் வந்தவர்கள் முன்னோக்கி சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால் அவர்களை பார்க்க வந்தபோது விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.ஆனால் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் சிக்கினால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் வந்த வழியிலேயே வண்டலுார் நோக்கி திரும்ப சென்றுள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.தொடரும் பைக் ரேஸ்ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பெரும்பாலான இளைஞர்கள் தங்களது விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களில் வண்டலுார் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.வெளிவட்ட சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததால் பைக் ரேஸ், பைக் சாகசங்கள், விபத்துக்கள், குற்றச் சம்பவங்கள் குறித்து போலீசார் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பைக் ரேஸில் விபரீதம் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் பலி-விபத்துக்கு காரணமான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bike Race ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...