×

ஜெயங்கொண்ட சீடனுக்காக குரு எழுப்பிய ஜகன்னாதீஸ்வரம்

கலைகளின் பிறப்பிடமான காஞ்சிபுரத்திலிருந்து, வந்தவாசி நோக்கிப் பயணியுங்கள். சரியாக பதினெட்டாவது கிலோ மீட்டர் தூரத்தினைக் கடக்கும்போது, ஏறக்குறைய ஆயிரமாண்டு சரித்திரப் புகழ்வாய்ந்த ஓர் ஊரின் காற்றினை நீங்கள் சுவாசிக்கிறீர்கள் என்று பெருமிதம் கொள்ளுங்கள். கூழமந்தல் என்பது அவ்வூரின் பெயர். இப்பெயர் கேட்டவுடன் பேசும் பெருமாள் எனப்படும் விஷ்ணு கோயில் மனதில் நிறைவது இயல்பே. கூடவே நானொருவன் இருக்கின்றேனே அருட்பாலிக்க ஆண்டுகள் கடந்தும் என்றோர் குரல் மனதினில் கேட்டால், இறங்கி சற்று காலாற நடந்து பாருங்கள். ஐந்து நிமிட நடைப்பயணத்திற்குள், அருமையான ஒரு சிவாலயம் ஒன்று கவனிப்பார் எவருமின்றி காத்திருப்பது புரியும்.

உள்ளிருக்கும் இறையான ஜகன்னாதீஸ்வரரும் சாதாரணமானவர் அல்ல. தென்கிழக்கு ஆசிய நாடுகளை எல்லாம் வென்று, உலகின் கால்பகுதியை தன் ஆட்சியின் கீழ் ஆண்டு வந்த, கங்கையும், கடாரமும் கொண்டு சிம்மாசனமிட்டிருந்த செம்பியர் கோனான ராஜேந்திர சோழனையே, தன் அடி பற்றி அடிபணிய, தலைநகராம் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து இங்கு வரவைத்தவர். கூழமந்தல் ஜகன்னாதீஸ்வரரின் சிறப்பை, அவரின் ஆரம்ப காலத்திலிருந்து பார்ப்போம். அது கி.பி. 1034. விக்ரமசோழபுரம். இரவு முதல் ஜாமத்தின் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த ஐந்து புரவிகளும் வந்து கொண்டிருந்தன. நடுநாயகமாய் கரும் புரவியில் வந்த கம்பீரமான அவன் ஓர் மாமன்னன்.‘‘போதும். இதற்கு மேல் நடந்தே செல்லலாம்’’ என்றான்.‘‘ஏன் அரசே! இந்தத் திருப்பம் திரும்பினால் கோயில் இங்கிருந்தே தெரியும். அதுவரை புரவியிலேயே செல்லலாமே’’ என்றான் தலைமை வீரன்.

‘‘வேண்டாம். கோயில் வாசலில் எனக்காக என் குருநாதர் வழிமேல் விழி வைத்து காத்திருப்பார். அவர் அங்கு நிற்க, அவர் முன் நான் புரவியில் சென்று இறங்க விரும்பவில்லை. அது அவரை அவமதிப்க்கு புள்ளாக்கி விடும். எனவே, இங்கிருந்து நடந்தே செல்லலாம்’’ என்ற மன்னனை வியப்புடன் பார்த்தனர் வீரர்கள் நால்வரும். அந்த மன்னனே ராஜேந்திர சோழன். அதே நேரம், கோயிலின் வாசலில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார் குரு. அவர் கண்கள் தெருவையே நோட்டமிட்டன.‘‘யாருக்காக மாலையில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இரவு முதல் ஜாமம் முடியப் போகிறது. சற்று அமருங்களேன் பண்டிதரே!’’ சொன்னார் கரியமாணிக்கம் என்ற பெரியவர்.‘‘இல்லை நண்பரே! என் சீடன் ஒருவன் அவனுக்காக நான் கட்டிய இந்தக் கோயிலை என் அழைப்பின் பேரில் காண வருகிறான். வருபவன் என் சீடன்தான் என்றாலும், இந்த நாட்டின் பேரரசன்.

அவன் வரும் வேளையில் நான் அமர்ந்து இருப்பதோ, வரவேற்காமல் இருப்பதோ, அவனை அவமதிப்புக்கு உள்ளாக்கிவிடும். அதனால்தான் அவனை எதிர்நோக்கியே காத்திருக்கிறேன்’’ என்றார் குருவானவர். அந்த குருநாதர் சர்வ சிவ பண்டிதர். குருவின் மேல் பெருமதிப்பு கொண்ட சீடன்; சீடன் மேல் பேரன்பு கொண்ட குரு. கங்கை வரை படையெடுத்து சென்று, எதிர்ப்பட்ட நாடுகளை எல்லாம் வென்று, அங்கிருந்து கங்கை நீர் கொணர்ந்து, தான் எழுப்பிய சோழீஸ்வரர்க்கு அபிஷேகமும் செய்து, தான் வெட்டிய ராஜேந்திரப் பேரேரியில், கங்கை நீரையும் கலந்து, சோழ கங்கப் பேரேரியாக்கினான் ராஜேந்திரசோழன். தனது தலைநகரான சோழபுரத்தில், ஈசனுக்காக அவன் எழுப்பிய பெருங்கற்றளியே கங்கை கொண்ட சோழீஸ்வரம்.

தன் சீடனின் வெற்றிகளையும், மாண்பினையும் கண்டு பூரித்துப் போனார் குருவானவர். சீடனின் புகழ் தரணியெங்கும் தெரிவிக்க, அவன் மேல் கொண்ட பேரன்பினை வெளிப்படுத்த, எடுப்பித்தார் அவரும் ஒரு கற்றளி. கூழமந்தலில்.... அதேபெயரில், கங்கை கொண்ட சோழீஸ்வரம் என்ற பெயரிலேயே. அதுதான், இப்போது இருக்கும் ஜகன்னாதீஸ்வரர் கோயில். அன்றைய பெயர் கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயம். இவர் கட்டிய கோயில்தான் கங்கை கொண்ட சோழீஸ்வரம். ராஜேந்திரனின் 22 ஆவது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அது கிபி 1066. சோழ மண்டலம். தனது அண்ணன் சோழக் கேரளனின் சாளுக்கிய வெற்றியின் நினைவாக வீர ராஜேந்திரன் இந்தக் கோயிலைச் சுற்றி புதிய நகரமைத்து சோழக் கேரளபுரம் என்று பெயரிட்டான்.

இந்தக் கோயிலைச் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் இணைத்து சோழமண்டலம் எனப் பெயரிடப்பட்டது. வெள்ளையர்கள் காலத்தில் கிராமங்களின் கணக்கெடுப்பினை ஆய்வு செய்ய வந்த வெள்ளையன் ஊரின் பெயர் கேட்க, சோழமண்டலம் என கிராமத் தலைவர் சொல்ல, தமிழே அறியாத வெள்ளையன் விழிக்க அதை சிபிளிஞீபிகி விகிழிஞிகிலிகிவி என அரைகுறையாய் ஆங்கிலம் தெரிந்த ஒருவர் எழுதிக் காட்ட, வெள்ளையன் அதைப் படித்தான் கூழமந்தல் என்று அப்படியே பதிந்தும் தொலைத்தான். இப்படித்தான் விக்ரம சோழபுரம், சோழக் கேரளபுரம், சோழ மண்டலம் என எல்லாப் பெயரும் போய் கூழமந்தல் ஆகி நின்றது இவ்வூர். அதுவும் மருவி கூழம்பந்தல் என ஆகிவிட்டது தற்போது. இந்தப் பெயருக்காக ஒரு புனைவுக் கதை கூட இருக்கலாம்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் வசப்பட்டது இந்தக் கற்றளி. சுற்றிலும் வேலி. கோயிலும் அதன் சிற்பங்களும் புகைப்படம் எடுக்கப்பட்டது. முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், கிருஷ்ண தேவராயன் கல்வெட்டுகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டன. கிடைத்த தகவல்கள் அத்தனையும் ஆவணப் படுத்தப்பட்டன. ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்த இக்கற்றளி காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி வரும் சாலையில்.. 18 கி.மீ. தொலைவில் ஆள் அரவமின்றி விசேஷ காலங்களில் வேடிக்கை பார்க்கும் பொருளாகக் கவனிப்பாரின்றி இருந்தாலும், கம்பீரமாய் நிற்கிறது. தன் சீடனுக்காக, அவன் மேல் கொண்ட பேரன்பிற்காக, ஒரு குரு கட்டிய கோயில். கங்கை கொண்ட சோழீஸ்வரம் எனப் பெயர் தாங்கி நிற்கிறது இன்னமும் கூழமந்தலில். இறைவனை ஜகந்நாதீஸ்வரர், சோழீஸ்வரர், மனு மகாதேவீஸ்வரர் எனபல பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.

சிற்பங்களும், அப்படியே கங்கை கொண்ட சோழபுரக் கோயிலை பிரதிபலிக்கின்றன. மாதா, பிதா, குரு என அத்தனை பேரையும் தெய்வமாகப் பாவிக்கச் சொன்னது நமது ஆன்மீக தர்மம். இங்கு, சீடனுக்காக, தெய்வத்திற்கு கற்றளி அமைத்து, உயர்ந்து நிற்கிறார் குரு. குருவே தெய்வத்திற்கு நிகரானவர் எனில், அத்தகைய ஒரு குரு எழுப்பிய தெய்வம், எத்துணை மகோன்னதமானவர்! சிதைந்திருந்தாலும், அழகுறக் காட்சியளிக்கும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் உணர்த்தும் உங்களுக்கு. சோழீஸ்வரரான ஜகன்னாதீஸ்வரரின் பெருங்கருணையை போய்ப் பாருங்கள் ஒருமுறை கொடுப்பினை இருப்பின் காத்திருக்கிறது. அங்கு இறை காலம் கடந்தும் வாரி வழங்க அருள்பாலிக்க... ஆட்கொள்ள... காத்திருக்கிறான்.


உளி மகிழ் ராஜ்கமல்

Tags : Jagannathisivaram ,Guru ,disciple ,
× RELATED பசுபதீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை