×

பேரையூர் அருகே முத்தாலம்மன் கோயில் 6 சப்பர பவனி கோலாகலம்

பேரையூர்: பேரையூர் அருகே பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோயில் 6 சப்பர பவனி நேற்று நடைபெற்றது. இதில் 7 ஊர்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், பேரையூர், டி.கல்லுப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோயில் 6 சப்பர பவனி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, டி.கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, கே.சத்திரப்பட்டி, கிளாங்குளம், காடனேரி ஆகிய ஆறு ஊர்களில் இருந்து அம்மன் சிலைகளுடன் சப்பரங்களை தலையில் சுமந்து இளைஞர்கள் வி.அம்மாபட்டி வந்து சேர்ந்தனர். அங்கு அம்மன் சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் சப்பரங்களை அவரவர் ஊர்களுக்கு கொண்டு சென்றனர்.

இதன்பிறகு வி.அம்மாபட்டி முத்தாலம்மன், ஆறு அம்மனையும் வழியனுப்பி வைத்துவிட்டு கோயிலுக்கு வந்து சேர்ந்தது. அம்மனை பூஞ்சோலைக்கு அழைத்துச் செல்லும் போது குழிமாத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இத்திருவிழாவில் 7 ஊர்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பேரையூர் டிஎஸ்பி சூரகுமாரன், இன்ஸ்பெக்டர்கள் விஜயகாண்டீபன், குருவெங்கட்ராஜ் தலைமையில் நூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சப்பர பவனி திருமங்கலம்  ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றதால் போக்குவரத்து மாற்றப்பட்டது.

Tags : Muthathalamman ,Peraiyur ,
× RELATED கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது