நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஸ்டில் போட்டோகிராபர் லால், கீதா கைலாசம் தம்பதியின் மகன் கவின், சிறுவயதில் இருந்தே சினிமா நடிகனாகி சாதிக்க விரும்புகிறார். ஒருகாலத்தில் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் தோற்ற லால், தனது நிறைவேறாத லட்சியத்தை மகன் மூலம் நிறைவேற்றத் துடிக்கிறார். நிலையான வருமானம் இல்லாத திரைத்துறையை விட, மகனின் எதிர்கால வாழ்க்கை முக்கியம் என்று துடிக்கும் கீதா கைலாசம், கவின் நன்கு படித்து, கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று, அவரது சினிமா ஆசைக்கு முட்டுக்கட்டை போடுகிறார். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் பிரீத்தி முகுந்தனை கவின் காதலிக்கிறார். அப்போது மும்பையில் நடிப்புப் பயிற்சி அளிக்கும் சஞ்சய் ஸ்வரூப்பிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ளும் கவினுக்கு, அவரது ஆசைப்படி சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், திடீர் விபத்தில் சிக்கிய அவர் கோமாவுக்குச் செல்கிறார்.
முகத்தில் ஏற்பட்ட தழும்பும், மாறிய அவரது தோற்றமும் சினிமா கனவை நனவாக்கியதா, இல்லையா என்பது மீதி கதை. கவினின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல் கல். கலை என்ற கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். தந்தையுடன் ஒரு நண்பனைப் போல் பழகுவதிலும், நடிகனாக வேண்டும் என்ற ஆர்வத்தில் கனவுகளைச் சுமப்பதும், காதலில் சிக்கிய பிறகு அதிலிருந்து மீளத் துடிப்பதுமாக, நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். கல்லூரி விழாவில் பெண் வேடமணிந்து நடனமாடி கலக்கியிருக்கிறார். கவின் மீது ஏற்பட்ட காதலையும், பிறகு அவரது பிரிவையும் பிரீத்தி முகுந்தனின் நடிப்பு இயல்பாகப் பதிவு செய்துள்ளது. நிராதரவாக இருக்கும் கவினுக்கு தன்னம்பிக்கையூட்டி, அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறும் கேரக்டரில் அதிதி பொஹங்கர், மேடை நாடக அனுபவத்தை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார். லால் மற்றும் கீதா கைலாசத்தின் நடிப்பு கதைக்கான பலம்.
கவின் நண்பர் தீப்ஸ் சிரிக்க வைக்கிறார். தீரஜ், மாறன், ‘ராஜா ராணி’ பாண்டியன், நிவேதிதா ராஜப்பன், ‘காதல்’ சுகுமார் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர். கே.எழில் அரசுவின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு ஏற்ப பயணித்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஈர்த்தாலும், எல்லா காட்சிகளுக்கும் பின்னணி இசையை அலறவிட்டிருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே அழுத்தம். ‘கனவுகளுக்காக இறுதிவரை போராடும் அனைவருமே ஸ்டார்தான்’ என்று சொல்லும் இயக்குனர் இளன், காட்சிகளை நீளமாக்கி திரைக்கதையில் தடுமாறியுள்ளார். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் குறித்து மீண்டும் ஒருமுறை யோசித்திருக்கலாம்.
The post ஸ்டார் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.