×

கொம்மடிக்கோட்டை கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா

சாத்தான்குளம்: கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோயிலில் சந்திரசேகரர், மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண விழா நடந்தது. சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக் கோட்டையில் ஸ்ரீபாலாசேத்திரம் என்றும் அழைக்கப்படும் மனோன்மணி அம்பாள் சமேத சந்திரசேகரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண உற்சவ விழா ரோகிணி நட்சத்திரத்தில் நடந்தது. விழாவையொட்டி முன்னதாக கோயில் மண்டபத்தில் யாகாசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் பூஜைகள் நடத்தினர்.

மாலை 3 மணி அளவில் சந்திரசேகர சுவாமி அம்பாளுடன் எழுந்தருளினார். பின்னர் மாலை 4மணி அளவில் முக்கனிகள், சர்க்கரை, வெல்லம், பருப்பு, இனிப்புகள், அரிசி, மஞ்சள், வளையல்கள் ஆகிய பொருட்கள் சீர்வரிசைகளாக வைக்கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது.அதை தொடர்ந்து சுவாமிஅம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றுமாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர்அம்மி மிதித்தல், தேங்காய் உருட்டுதல், நலுங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை6 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தேரில் எழுந்தருளி திருவீதியுலா வந்தனர். விழா ஏற்பாடுகளை வாலைகுருசாமி பக்த குழுவினர் செய்திருந்தனர்.

Tags : festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!