×

சென்னையில் உள்ள நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: நீர்வழித்தடங்களில் 70 சதவீத பணிகள் முடிந்தது

சென்னை: சென்னையில் உள்ள நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   சென்னையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆகாய தாமரை பச்சை பசேல் என பரவி கிடக்கிறது. இவை நீரை அதிக அளவில் உறிஞ்சி நீர்நிலைகளின் தன்மையை அழித்து விடும் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நீர்நிலைகளால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.  மேலும் இந்த ஆகாய தாமரையானது, தான் உயிர்வாழ தண்ணீரை எளிதில் ஆவியாக்கி நீர்நிலையை வறண்டு போக வைத்து விடும். குளங்கள் மற்றும் நீர்நிலைகளை அழகுபடுத்துவதற்காக தென்அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட தாவரம் தான் ஆகாய தாமரை. அழகுக்கு வந்தது தற்போது ஆபத்தில் போய் முடிந்துள்ளது. இதற்கு இயற்கை எதிரிகள் இல்லாததால் நீர்நிலைகளில் அதிகமாக பரவி வருகிறது. இந்த தாவரம் வளரத் தொடங்கி விட்டால் ஒரு ஏரியை காப்பாற்றுவது மிகவும் கடினமான செயலாகும்.  பொதுவாக கழிவுநீர் கலக்கும் நீர்நிலைகளில் தான் ஆகாய தாமரை வேகமாக வளர்கிறது. சுத்தமான நீரில் இவை வளர்வதில்லை. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம், தனது வேர்கள் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து நீர் நிலைகள் முழுவதும் பரவிவிடுகிறது. மிக கனமாகவும், பசுமையானதாகவும் இலைகளை கொண்டிருக்கும் இந்த தாவரம் ஊதா நிறத்திலான பூக்களை கொண்டது.  இதன் தண்டிலிருந்து புறப்படும் கிளைகள், விரைவில் புதிய செடியாக பரவும். இவை தண்ணீரை எளிதில் ஆவியாக்குவதால், குளம், குட்டைகள் விரைவில் வறண்டு விடும். இதனால் இந்த ஆகாயத்தாமரைகள் நீர்நிலைகளுக்கு  மிகவும் ஊறுவிளைக்கும் ஒரு தாவரமாகும். இந்த தாவரமானது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகள் அனைத்திலும் படர்ந்து கிடக்கிறது.  இதனால் அந்த நீர்நிலைகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சென்னையை பொறுத்தவரை மாநகராட்சிக்குட்பட்ட 14 மண்டலங்களில் மொத்தம் 34  நீர் வழித் தடங்கள்  உள்ளது. குறிப்பாக 3 முக்கிய நீர் வழி தடமாக அடையாறு ஆறு, கூவம் ஆறு,  பக்கிங்காம் கால்வாய் திகழ்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்ப்பட்ட  பகுதிகளில் மட்டும் மழை நீர் வடிகால்களின் தூரமானது 2007 கி.மீ ஆகும்.  இதில் மழை நீர் வடிகால்களின் மூலம் வெளியேறும் நீர்  அனைத்தும் சிறிய நீர்  வழித்தடத்தில் கலந்து இவையனைத்தும் 3 பெரிய நீர் வடிகால்கள் மூலம் கடலில்  கலக்கிறது, கடந்த சில ஆண்டுகளாக இந்த நீர் வழித்தடங்களை சரிவர  பராமரிக்காத காரணத்தால் ஆகாய தாமரை படர்ந்து நீர் வழி தடங்களை ஆக்கிரமித்து  மழை நீரானது நீர் வழி தடத்தில் கலக்காமல் பாதிப்பை ஏற்படுத்தியது.  அது  மட்டுமல்லாமல் ஆகாய தாமரை அதிகளவில் படர்ந்து கொசுக்களுக்கு உறைவிடமாக  மாறுகிறது. குறிப்பாக கொசுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை  ஆகாயதாமரை தருகிறது. இதனால் கொசுக்கள் காலை நேரங்களில் ஆகாய் தாமரை படர்ந்துள்ள இடங்களை ஆக்கிரமிக்கின்றன. இரவு நேரங்களில் மனிதர்களின் வசிப்பிடத்திற்கு சென்று மலேரியா, டெங்கு போன்ற  பாதிப்பை ஏற்படுத்துகிறது.   எனவே, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிற ஆகாயத் தாமரையை முற்றிலுமாக அகற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆகாயதாமரையை அகற்ற சென்னை மாநகராட்சியில் 3 வகையான பிரத்யேக இயந்திரங்கள் என மொத்தம் 9 இயந்திரங்கள் உள்ளது. அதன் மூலம் இப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி  தலைமை பூச்சி தடுப்பு அலுவர் ஒருவர் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் போர்க்கால  அடிப்படையில் ஆகாய தாமரையை அகற்றும் பணியானது இயந்திரம் மற்றும்   மாநகராட்சி ஊழியர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 70 சதவீதப் பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் ஓரிரு வாரங்களில் முடிவடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாய தாமரை ஒரே இடத்தில் படர்ந்திருந்தால் எளிதாக  அகற்றி விடலாம். ஆனால் ஏரி, ஆறு பகுதிகளில் ஆங்காங்கே பரவி இருப்பதால் சற்று  கடினமாக உள்ளது’’ என்றார்….

The post சென்னையில் உள்ள நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: நீர்வழித்தடங்களில் 70 சதவீத பணிகள் முடிந்தது appeared first on Dinakaran.

Tags : Aagai Lotus ,Chennai ,Aagayat Lotus ,Aboi ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு