×

இஞ்சிமேட்டில் அருள்பாலிக்கும் திருமண பாக்கியம் தரும் வரதராஜ பெருமாள்

நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் 4வது அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்டு அருள்பாலிக்கிறார். பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களை தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாகவும் இவர் கருதப்படுகிறார். இத்தகைய நரசிம்மர் ராமரின் கையிலேயே குடிகொண்டிருக்கும் கோயில், திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேட்டில் அமைந்துள்ளது. ராமபிரான் தன் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் தனுசின் (வில்) மேல்புறத்தில் ‘நரசிம்ம மூர்த்தி’எழுந்தருளியிருப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய தரிசனமாகும். ராமரின் அருகிலேயே கருடாழ்வாரும், அனுமனும் காட்சியளிக்கின்றனர்.

தல வரலாறு:  

முனிவர் ஒருவரின் தவத்தால் மகிழ்ச்சியடைந்த திருமால், முனிவரின் கண்முன் தோன்றி அருள்பாலித்தார். அப்போது இத்தலத்திலேயே குடிகொண்டு மக்களுக்கு வரமளிக்க வேண்டும் என முனிவர் வேண்டியதை அடுத்து திருமாலும் இங்கேயே ஸ்ரீராமராகவும் காட்சி தந்தார். இதனை அறிந்த பலரும் இத்தலத்திற்கு வந்து திருமாலுக்கு பூஜை செய்யத் துவங்கினர். இதுகுறித்து அறிந்த மன்னரும் அங்கேயே கோயில் ஒன்றைக் கண்டு வழிபடத் துவங்கினார். இதுவே இன்று இஞ்சிமேட்டில் மிகப்பெரிய திருமால் திருத்தலமாக விளங்குகிறது.

தல அமைப்பு:  


இங்கு கேட்கும் வரங்களைக் கேட்டபடி அருளும் திருக்கோலத்தில் பெருந்தேவி தாயார் சமேதராக வரதராஜப் பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
அழகிய நிலவு போன்ற தன் திருமுக மண்டலத்தால் எதிரிகளையும் ஈர்க்கக்கூடிய பேராற்றல் படைத்த ரகுகுல திலகன் ராமபிரான் இங்கு சீதாலட்சுமண சமேதராக தன்னை நாடிவந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் வரப்பிரசாதியாக சேவை சாதிக்கின்றார். மேலும் லட்சுமி நரசிம்மர், அனுமன், ஆழ்வார்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது. வயது கடந்தும் திருமண பாக்கியம் இன்றி இருப்போர் இங்கு நடைபெறும் திருக்கல்யாண பூஜையில் பங்கேற்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இன்றி தவிப்போர் பெருந்தேவி அம்மையாருக்கு மஞ்சளில் மாலை அணிவித்து வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும்.

மேலும் ஒவ்வொரு சுவாதி நட்சத்திரத்தின் போதும் சுவாமிக்கு சிறப்பு யாகம்  நடைபெறும் அப்போது திருமண வரம் வேண்டியும், கடன் தொல்லை தீரவும் பக்தர்கள் வழிபாடு நடத்துவார்கள். வேண்டியவை நிறைவேறியதும் பெருமாளுக்கும், பெருந்தேவி தயாருக்கும் விரலி மஞ்சளில் அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், பக்தர்கள் புது ஆடைகள், நகைகள் என தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பெருமாளுக்கு உகந்த விரத நாட்களான வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெறும். மேலும், இக்கோயில் தலத்திலேயே அனுமனுக்குத் தனி சன்னதி இருப்பதால் அனுமன் ஜெயந்தி அன்றும், ராம நவமி அன்றும் சிறப்பு அலங்காரங்களுடன் பிரார்த்தனை நடைபெறும்.

கோயில் அமைவிடம்:

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஞ்சிமேட்டில் அமைந்துள்ளது இந்த கோயில். திருவண்ணாமலைகாஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு கடந்தால் இத்தலத்தை அடையலாம். ஆரணியில் இருந்து 27 கிலோ மீட்டர் பயணம் செய்தும் இக்கோயிலை அடையலாம்.

Tags : Varadaraja Perumal ,wedding ,
× RELATED தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்