×

போலீசார் சாராய ரெய்டில் சிக்கியது அல்லேரி மலையில் பயிரிட்ட கஞ்சா செடிகள் பறிமுதல்-பெண் கைது; கணவருக்கு வலை

அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே அல்லேரி மலையில் போலீசார் சாராய ரெய்டுக்கு சென்றபோது, விவசாய நிலத்தில் பயிரிட்ட கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண்ணை கைது செய்த போலீசார், அவரது கணவரை தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் கள்ளச்சாராயம், பாக்கெட் சாராயம் அதிகளவில் காய்ச்சி விற்பதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், அணைக்கட்டு காவல்நிலைய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மற்றும் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான அணைக்கட்டு போலீசார் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று அல்லேரி மலைப்பகுதியில்  சாராய ரெய்டு நடத்தினர்.அப்போது அங்குள்ள அவுசாரிஓரை மலை கிராமத்தில் உள்ள ஒருவரது நிலத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த செடிகளை ஆய்வு செய்தனர். அது கஞ்சா செடிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிலத்தின் உரிமையாளரை பிடிப்பதற்காக அவர்கள் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் பெண் மட்டும் இருந்தார். அவர் கணவர் இல்லாததால் அந்த பெண் மற்றும் அவர்கள் நிலத்தில் இருந்த சுமார் 50 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்து நேற்று மாலை அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில் அந்த பெண் அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி ராதா(40) என்பதும் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் வெளியூரிலிருந்து வாங்கிவந்து கஞ்சா செடிகளை நட்டு வளர்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தகவலின்பேரில் டிஎஸ்பி திருநாவுக்கரசு  காவல் நிலையம் வந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் ராதாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவரது கணவர் கோவிந்தனை தேடி வருகின்றனர்.மேலும் அல்லேரிமலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இதுபோன்று கஞ்சா செடிகள் ஏதாவது பயிரிட்டு வளர்க்கப்பட்டு வருகிறதா எனவும் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post போலீசார் சாராய ரெய்டில் சிக்கியது அல்லேரி மலையில் பயிரிட்ட கஞ்சா செடிகள் பறிமுதல்-பெண் கைது; கணவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Allerie Mountain ,Allerie ,Tampakku ,Dinakaran ,
× RELATED அல்லேரி மலை கிராமத்தில் சாலை அமைப்பது...