×

மது போதை தகராறில் விபரீதம் கம்பெனி ஊழியர் அடித்துக்கொலை: விபத்து நாடகமாடிய நண்பன் கைது

வேளச்சேரி: மேடவாக்கம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (48). தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த மே 5ம் தேதி வேளச்சேரி மெயின் ரோடு, பள்ளிக்கரணை குழந்தை ஏசு தேவாலயம் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடிபட்டு சுயநினைவின்றி கிடந்ததாக கூறி, அவரது நண்பர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மே மாதம் 24ம் தேதி சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக, முதலில்  பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவத்தன்று அவருடன் யார் யார் இருந்தது என தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்கரணை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒருவர் சரணடைந்து, நான்தான் குமாரை கொலை செய்தேன், என கூறினார். இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி, பள்ளிக்கரணை போலீசாருக்கு  தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த நபரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கார்த்திக் (24) என்பதும், சென்னை மாநகராட்சி குப்பை அள்ளும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்ததும் தெரிந்தது.  சம்பவத்தன்று இவரும், குமாரும் அதேபகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர். அப்போது  போதை தலைக்கு ஏறிய நிலையில், இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த  கார்த்திக், குமாரை மார்பில் சரமாரியாக காலால் எட்டி உதைத்து, முகத்தில் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த குமார் மூச்சு பேச்சு இன்றி மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  கார்த்திக், 108 ஆம்புலன்ஸை வரவழைத்து,  அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நடந்ததாக நாடகமாடி, ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சேர்த்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார், இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர். பின்னர், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பரில் புழல் சிறையில் அடைத்தனர்….

The post மது போதை தகராறில் விபரீதம் கம்பெனி ஊழியர் அடித்துக்கொலை: விபத்து நாடகமாடிய நண்பன் கைது appeared first on Dinakaran.

Tags : Kumar ,Ranganathapuram ,Medavakkam ,Dinakaran ,
× RELATED திருவான்மியூரில் கழுத்து அறுத்து...