×

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை (24ம் தேதி) நடைபெற உள்ள அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  கங்கை முதல் கடாரம் வரை வெற்றிபெற்றதன் நினைவாக கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை (24ம்தேதி) நடைபெற உள்ள அன்னாபிஷேகத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கணக்க விநாயகருக்கு முதல் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி கோயிலில் யாகம் வளர்த்து அபிஷேகம் ஆராதனை, நடைபெற்றது.

இந்த கணக்க விநாயகருக்கு அபிஷேகம் செய்யும் போது விநாயகர் சிலையானது பச்சை நிறமாக மாறிவிடும், பழைய நிலைக்கு திரும்பவும் வர சிறிது நேரமாகும். இந்த விநாயகர் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. ராஜேந்திரசோழன் கணக்க விநாயகரை தரிசனம் செய்த பின்னர் தான் அரண்மனைக்கு செல்வது வழக்கமாகும் என்பது வரலாறு. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு முதல் அபிஷேகம் கணக்க விநாயகருக்கு நேற்று நடைபெற்றது.

கங்கைநீர் ,மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். அபிஷேகம் அலங்காரம் விழா ஏற்பாடுகளை அன்னாபிஷேக விழா கமிட்டியினர் மற்றும் இந்து சமயஅறநிலையதுறையினர் செய்திருந்தனர்.

Tags : Ganesha Vinayaka ,Annapishekathil ,
× RELATED கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர்...