×

யோகங்களை அருளும் அறுபத்து நான்கு யோகினிகள்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்ட நெடும் வறண்ட நிலத்தின் மையத்தே அமானுஷ்யமாக காட்சியளிக்கின்றது பெருங் கிணறு வடிவிலான வட்டக் கோயில். ஆயிரம் வருட தொன்மத்தை சுமந்து நிற்கும் கோயிலுக்குள் நுழைந்து நோக்க விதம்விதமான கோலத்தில் யோகினிகள் சிற்பங்களாகப் பூத்து காட்சி தருகின்றனர். பாரத தேசத்தின் நெடும் மரபுகளில் ஒன்றான சாக்தமெனும் சக்தி வழிபாட்டின் உச்சங்களாக இக்கோயில்கள் விளங்குகின்றன. பாரத தேசத்தில் சதுஷ்சஷ்டி கண யோகினியர் எனப்படும் அறுபத்து நான்கு யோகினிகளுக்கான கோயில்கள் பல இருந்துள்ளன. கால ஓட்டத்தில் அவை அழிந்து போயின.

காஞ்சிபுரத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் சதாசிவ மூர்த்தியைச் சுற்றி அறுபத்து நான்கு யோகினிகளின் திருவுருவங்களைக் கொண்ட ஆலயம் இருந்ததாகக் கூறுகின்றனர். காலப்போக்கில் அவை காணாமல் போய்விட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க எசாலம் என்னும் ஊருக்கு அருகில் புகழ்பெற்ற ஐயனார் கோயில் உள்ளது. அதன் அருகில் உள்ள அம்மன் கோயிலில் வரிசை வரிசையாக பெண் தெய்வ வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளனர். இதில் எண்பதுக்கும் மேற்பட்ட வடிவங்கள் இருக்கின்றன.

இதனை அறுபத்து நான்கு யோனிகளுக்கான கோயிலாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இப்போது நான்கு யோகினியர் கோயில்களே இருப்பதாகக் கூறுகின்றனர். இவற்றில் இரண்டு ஒடிசாவிலும் இரண்டு மத்தியப் பிரதேசத்திலும் உள்ளன. ஒடிசாவில் இருப்பவற்றில் முதலாவது  ஆலயம் ஒரிசாவின் தலை நகரான புவனேஸ்வரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஹீராபூரில் இருப்பதாகும். மற்றது ராணிப்பூரில் (ஜாரில்) இருக்கிறது. இவற்றைத்
தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

ஒடிசாவின் தலைநகராக புவனேஸ்வரில் இருந்து தெற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் ஹீராபூரை அடையலாம். ஒன்பதாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த பிரம்ஹா அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹீராதேவி என்பவளால் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். அவள் பெயராலேயே இவ்வூர் அழைக்கப்படுவதாகும். இந்தக் கோயில் சிறிய அளவில் இருப்பதோடு மேல் கூரையின்றி இருக்கிறது. வட்ட வடிவமான கட்டிடப் பகுதியின் உள்வட்டத்தில் யோகினிகளின் வடிவங்கள் உயர்தர கல்லால் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. கோயிலின் வாயிலில் துவார பாலகர்கள் உள்ளனர்.

சுற்றிலும் நான்கு பைரவர் வடிவங்கள் உள்ளன. இங்கு சப்த மாதர்களும் இடம் பெற்றுள்ளனர். நடுவில் மகாமாயா என்னும் தேவி உள்ளாள். நவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வழிபடுகின்றனர். நவதுர்க்கைகளையும் இங்கே காண்கிறோம். இவர்கள் வாளும் கேடயமும் கொண்டுள்ளனர். வெளிவட்டச் சுவரில் இவர்கள் ஏந்தியுள்ள வாளும் கேடயமும் ஒவ்வொன்றும் வித்தியாசமான இருப்பதுடன் வாளை ஓங்கி வெட்டும் நிலையில் உள்ளனர். இதுவே சதுஷ்சஷ்டி யோகினியர் கோயில்களில் மிகத் தொன்மையானது என்று கருதப்படுகிறது.

மிகுந்த கலைக்கோயிலாக இருக்கும் சதுஷ்சஷ்டி யோகினியரின் மற்றொரு கோயில் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூருக்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் பெத்தகாட் என்னுமிடத்தில் குன்றின் உச்சியில் உள்ளதாகும். இதனருகில் நர்மதை ஆறு ஓடுகிறது. இந்தப் பெரும் ஆலயம் வட்ட வடிவமாக அமைந்திருக்கின்றது. உள்வட்டமாக மண்டபம் அமைந்துள்ளது.  ஒவ்வொரு யோகினிக்கும் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள ஆலயத்தில் கௌரி சங்கரர் எழுந்தருளியுள்ளார். இவர் கௌரி தேவியுடன் நந்தி மீது அமர்ந்து பயணிக்கும் கோலத்தில் இருக்கிறார்.

இவருக்குப் பக்கத்தில் விநாயகரும் திருமாலும் உள்ளனர் வட்டமாக அமைந்த இந்த ஆலயத்தில் யோகினியர் வாகனங்களின் மீது அமர்ந்துள்ளனர். இவை கலை நுணுக்கம் கொண்டவைகளாகும். இங்குள்ள தேவியரின் பீடத்தில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜூராஹோவில் மற்றொரு யோகினி ஆலயம் அமைந்துள்ளது. மொரீனா பகுதியில் மித்வாலி எனுமிடத்தில் சிறிய மலைமீது எழில் கொஞ்சும் தோற்றத்தில் இந்த ஆலயம் உள்ளது. இதன் வடிவம் நமது நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்.  இதில் வட்டமான மண்டபம் உள்ளது. நடுவில் வட்டமான மண்டபத்துடன் கூடிய கருவறை உள்ளது.

இது காலசூரிகள் என்னும் அரச வம்சத்தால் அமைக்கப்பட்டதாகும். கஜூரோஹோ கோயில்களில் உள்ள கலையம்சத்தை இங்கு காண்கிறோம். பெரும்பாலும் யோகினிகள் கோயில் வட்ட வடிவிலேயே அமைக்கப்படுகின்றன. உள் வட்டத்தில் மையத்தை நோக்கியவாறு யோகினிகளின் திருவுருவங்கள் நிலைப்படுத்தப்படுகின்றன. பீடத்தில் அவர்களது வாகனமும் செதுக்கப்பட்டுள்ளது. வட்டத்தின் நடுவில் சிறிய கோயில் அமைக்கப்பட்டு, அதில் துர்க்கை அல்லது கௌரி சங்கரர் அமைக்கப்படுகிறார். இந்த நான்கு கோயில்களிலும் உள்ள அறுபத்து நான்கு தேவியர் வடிவங்கள் ஒரே மாதிரியாக இல்லை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இவர்கள் பல வகைகளில் காட்சி தருகின்றனர். ஹீராபூரில் உள்ள யோகினியர் தத்தம் வாகனங்களின் மீது நிற்பவர்களாகவும் ரைன்பூர்-ஜாரியில் இருப்பவர்கள் நடன கோலத்திலும், பெத்தகாட்டில் இருப்பவர்கள் பரிவாரங்களுடன் லலிதாசனத்தில் வீற்றிருப்பவர்களாகவும் இருக்கின்றனர். ஒரு வகையில் அவர்கள் மலர் பறித்தல், உணவு சமைத்தல், வில் வித்தை பயில் பவர்கள் என்று சாந்த வடிவில் இருக்கின்றனர். இரண்டாவது வகையில் பலவிதமான ஆயுதங்களை ஏந்திய போர்க் கடவுளராக இருக்கின்றனர்.

மூன்றாவது வகையில் அவர்கள் யானை, குரங்கு, ஆந்தை, பேரண்ட பக்ஷி, மயில், கழுகு போன்ற முகங்களை உடையவர்களாகவும், வற்றிய வயிறு, அச்சமூட்டும் உருட்டும் கண்கள் போன்ற தோற்றத்தைக் கொண்ட பயங்கரமானவர்களாகவும் காட்சி தருகின்றனர். இவர்களின் பெயர் வரிசையும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. ஹீராபூரில் உள்ள தேவியரின் பெயர்கள் பகுரூபா, தாரா என்று தொடங்கி பத்ர காளியில் முடிகிறது. தென்நாட்டுப் பூஜையில் ஜயா, விஜயா என்று தொடங்கி விஷலங்யா என்று முடிகிறது. பழங்குடி மக்களிடம் இருந்து பெறப்பட்ட யோகினியர் பெயரும் வடிவமும் உக்ரமானதாக இருக்கின்றன.

இது நாட்டின் பல இடங்களில் பலவிதமான ஆச்சார்யர்களால் ரகசிய தந்திரங்களாக உபதேசிக்கப்பட்டதால் இப்படி பலவகையான பேதங்களைக் கொண்டுள்ளது. மகாபைரவர் சக்ரத்தில் 64 யோகினிகளும் 64 பைரவர்களுடன் சேர்த்தே வழிபடப்படுகின்றனர். அறுபத்து நான்கு தேவியர் வழிபாடு ரகசிய வழிபாடாகவே இருந்து வந்ததால் அவர்களைப் பற்றிய செய்திகளைத் தெளிவாக அறிய முடியவில்லை என்றாலும், இவர்கள் வழிபாட்டால் மண்ணும் மனித குலமும் பெருகி நலம் பெறுகின்றது என்பது பேருண்மையாகும். இவர்கள் இந்தப் பேரண்டத்தின் அளப்பரிய சக்தியின் தெய்வ வடிவங்களாகப் போற்றப்படுகின்றனர்.

சிவபெருமானை முதற் தெய்வமாகக் கொண்ட சைவ சமயத்திலும் அன்னை பராசக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சாக்த மதத்திலும் அறுபத்து நான்கு என்ற எண்ணிக்கை தனிச் சிறப்பைப் பெற்றுள்ளது. சைவர்களால் சிவராஜதானியாகக் கொண்டாடப்படும் மதுரை சாக்த பக்தர்களால் சக்திபீடம் என்று போற்றப்படுகிறது. மதுரையை ஆண்ட மன்னர்கள் வரிசையில் மதுரை மீனாட்சியும், அவளது கணவர் சோமசுந்தர பாண்டிய பரமேசுவரரும், கூடற் குமாரரான முருகக் கடவுளும் இடம் பெற்றுள்ளனர். மதுரையில் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய அருள் விளையாடல்கள் கணக்கற்றது என்றாலும்,

அவற்றுள் அறுபத்து நான்கைத் தொகுத்துப் புராணமாகப் பாடியுள்ளனர். மேலும் சிவனது வடிவங்கள் கணக்கற்றவை என்றாலும், அவற்றுள் உயர்ந்ததான அறுபத்து நான்கு வடிவங்களை அஷ் டாஷ்ட விக்கிரகங்கள் என்று போற்றுகின்றனர். இந்த அறுபத்து நான்கு வடிவங்களின் பெயர்களையும் வரிசைப்படுத்தி பாம்பன் சுவாமிகள் அஷ்டாஷ்ட விக்ரக லீலை என்னும் நெடும் பாடலைப் பாடியுள்ளனர். சரஸ்வதி வழிபாட்டில் அவளால் உண்டாக்கப்பட்ட நுண்கலைகளாக அறுபத்து நான்கு கலைகள் பேசப்படுகின்றன. ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்வால் அறிவிக்கும் என் அம்மை என்று அவள் போற்றப்படுகின்றாள். சக்தி வழிபாட்டில் அவளது கணமாக யோகினிகள் குறிக்கப்படுகின்றனர்.

இவர்களை சதுஷ்சஷ்டி யோகிகள் என்பர். இவர்கள் அறுபத்துநான்கு கோடி பேர்கள் என்று சாக்த நூல்கள் கூறுகின்றன. பாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர். அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும். ஸ்ரீவித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும். காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உபாசனை செய்து வந்திருக்கிறார்.

இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அவரை அவமானப் படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார். அப்போது அங்கிருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார். அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர்,

பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்குமானந்த ஸ்வாமி. அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள். நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார். இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

அம்பிகையின் புகழ்பாடும் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அவள் மகா சதுஷ்சஷ்டி கோடி யோகினி கணஸேவிதா என்று துதிக்கப்படுகிறாள். இதற்கு அறுபத்துநான்கு கோடி யோகினிகளால் சேவிக்கப்படுபவள் என்பது பொருள். இவர்கள் ஆதியில் தோன்றியபோது மாபெரும் மயக்கும் சக்திகளாக இருந்து பெருந்துன்பம் விளைவித்தனர் என்றும் சிவபெருமான் இவர்களை அழித்து மீண்டும் படைத்தார் என்றும் கூறுகின்றனர். மீண்டும் இவர்கள் தேவியின் சேவகர்களாக ஆயினர். அவளது படையில் முக்கிய கணங்களாக இவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அழகிய வடிவமும் இளமையும் கொண்டவர்கள்.

மிகுந்த ஆற்றல் கொண்டவர்கள். செய்வதற்கரிய செயல்களையும் எளிதில் செய்து முடிக்கும் திறம் பெற்றவர்கள். சிலர் மனித முகத்துடன் இல்லாமல் யானை முகம், சிங்க முகம், மான் முகம், பன்றி முகம் போன்றவற்றுடன் காட்சி தருகின்றனர். பலர் உக்ரமான வலிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளனர். அனைவருக்கும் தனித்தனியே வாகனங்களும் பரிவாரங்களும் இருக்கின்றன. சிலர் அமைதியாகவும், சிலர் ஆடல் புரிபவளாகவும், சிலர் யோக நிலையிலும் இருக்கின்றனர்.  திருமூலர் சக்தி கணமான இந்த அறுபத்து நால்வரை இரண்டு பாடல்களில் குறித்துள்ளார்.

அப்பாடல்கள் வயிரவிச் சக்கரம் என்னும் பகுதியில் பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளே ஓர்ஆரியத் தாளும் அண்டர் எண்மர் கன்னியர்பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும் சாரித்து சக்தியை தாங்கள் கண்டாரே - இதில் பாரித்த பெண்கள் எனப்படும் அறுபத்து நான்கு பெண்களும் அம்பிகையை வழிபட்டுப் பேறு பெற்றார்கள் என்கிறார். மேலும், குவிந்தனர் சக்திகள் முப்பத்திருவர் நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழ பரந்திதழாகிய பங்கயத்துள்ளே இருந்தனள் தானும் இடம்பல கொண்டே - என்று பல இடங்களும் அறுபத்து நான்கு கன்னியரோடு இருந்ததைக் குறிக்கின்றார்.

காசியில் யோகினி வழிபாடு தனிச் சிறப்புடன் விளங்கி வந்துள்ளது. காசியில் கங்கையின் கரையில் கட்டங்கள் எனப்படும் அறுபத்து நான்கு படித்துறைகள் இருக்கின்றன. இந்த அறுபத்து நான்கு கட்டங்க ளுக்கும் கட்டத்திற்கு ஒரு பைரவர், ஒரு யோகினி, ஒரு வேதாளம் என்ற கணக்கில் அறுபத்து நான்கு பைரவர்கள், அறுபத்து நான்கு யோகினிகள், அறுபத்து நான்கு வேதாளர்கள் என்று காவல்தெய்வங்கள் இருப் பதாகக் காசிக்கண்டம் கூறுகிறது. காசி க்ஷேத்திர மான்மியத்தில் இவர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த யோகினிகளைத் தவிர குப்த யோகினிகள் என்ற கணமும் உள்ளது. இவர்கள் வழிபாடு ரகசியமாக உள்ளது.

யோகினிகள் அறுபத்துநான்கு பேரையும் ஸ்ரீசக்ர வழிபாட்டில் சிறப்புடன் போற்றுகின்றனர். குறிப்பாக பைரவர் யந்திரங்களில் அறுபத்து நான்கு பைரவர்கள் அறுபத்து நான்கு யோகினிகள், அறுபத்துநான்கு வேதாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அறுபத்து நான்கு யோகினிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனிச்சிறப்பான ஆற்றலைக் கொண்டவர்கள். அதைத் தன்னை உபாசிக்கும் பக்தர்களுக்கு அளிப்பவர்கள் எனவே அறுபத்து நால்வரையும் ஒரு சேர வழிபடுவதோடு தனித்தனியாகவும் வழிபடுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியே வடிவத்தை விளக்கும் தியான ஸ்லோகம் மூல மந்திரங்கள் உள்ளன.

பரிவாரங்கள் உடனான சக்கரங்கள் ஆகியனவும் உள்ளன. இவர்களை உபாசித்து அனேக அன்பர்கள் உயர்ந்த செல்வங்களை அடைந்ததாக வரலாறு கூறுகிறது.  பைரவ பூஜையின்போது வேதாளர்களுக்கும் யோகினிகளுக்கும் தனித்தனியே பீடம் அமைக்கப்பட்டு அவற்றில்  அவர்களுக்கான பலி அளிக்கப்படுகிறது. சதுஷ்சஷ்டி யோகினிகளின் தோற்றத்தைப்பற்றி பல்வேறு கதைகள் உள்ளன. இவற்றில் முதன்மையானது சிவபெருமான் அந்தகாசுரனை வதைத்தபோது அஷ்ட பைரவர்களையும்  சப்தமாதர்களையும் தோற்றுவித்தார். அவர்கள் அந்தகாசுரனின் படைகளை அழித்தனர். சப்தமாதர்கள் சிவனருளால் அவரது பரிவாரமாயினர்.

அத்துடன் சக்தி கணத்தின் சேனைகளை நடத்துபவர்களாகவும் இருக்கின்றனர். பின்னாளில் மகாசக்தி துர்க்கை மகிஷனை அழிக்க அவதாரம் செய்தாள். அவனை அழிப்பதற்கு முன்பாக ரக்தபீஜனை வதைக்க வேண்டியிருந்தது. அவன் உடலில் இருந்து விழும் ஒவ்வொரு ரத்தத் துளிகளும் ரக்தபீஜர்களாக உருப்பெற்று எழுந்தனர். இப்படி அடுத்தடுத்துத் தோன்றி கணக்கற்றுத் திகழும் ரக்தபீஜர்களைக் கண்டு தேவி திகைத்தாள். அவளது சேனா கணத்தில் முதன்மை பெற்றிருந்த சப்த மாதர்களும் நாரஸிம்ஹியுடன் சேர்ந்து தம்மிடமிருந்து எண்மரை உற்பத்தி செய்தனர்.

எட்டு சக்திகளிடம் இருந்து எட்டு எட்டாகத் தோன்றி அறுபத்து நான்கு பெண்களாக இருந்த அவர்கள் மிகுந்த கோபத்துடன் விளங்கினர். அவர்கள் கணக்கற்ற மாயத் தோற்றங்களாக இருந்த ரக்தபீஜர்களை அழித்தனர். அவர்கள் உடலிலிருந்து பெருகிய ரத்தத்தைக் குடித்தனர். அதனால் நிஜரக்தபீஜனைத் தவிர மற்றவர்கள் மறைந்தனர். அம்பிகை எளிதில் ரக்தபீஜனை வதைத்தாள். அசுர ரத்தத்தைக் குடித்ததால் அவர்கள் பெருத்த வெறியுடன் திரிந்தனர். அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர்.

அவர்களை சிவபெருமான் நொடியில் வதைத்தார். பின்னர், சக்தியின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் படைத்தார். அவர்கள் தேவியின் படைத்தலைவிகளாக இருக்கும் வரத்தை அளித்தார். அதுமுதல் சக்தி கணத்தில் அறுபத்து நான்கு யோகினியரும் முதன்மை பெற்றவர்களாக இருந்து வருகின்றனர். சக்தியைக் குறித்த சக்ர வழிபாட்டில் அறுபத்து நான்கு யோகினிகள் இடம் பெறுகின்றனர். சப்தமாதர்கள், கௌரி எனப்படும் காளியுடன் சேர்ந்து அஷ்டமாதர்களானதுடன் அஷ்ட பைரவர் களின் தேவியரும் ஆயினர் என்பதை அறிவோம்.

அதுபோலவே அஷ்ட பைரவர்களிடம் தோன்றி அஷ் டாஷ்ட பைரவர்களான 64 பைரவர்களை இந்த அறுபத்து நான்கு யோகினியரும் அடைந்து அவர்தம் தேவியராயினர் என்றாலும் 64 யோகினியரைத் தனியாகவே வழிபடுகிறோம். அறுபத்து நான்கு யோகினியர் எப்போதும் கூட்டமாகவே இயங்குபவர்கள். அவர்களை பிரிக்க முடியாது.  சப்த மாதர்கள், பயிர்த்தொழில் கடவுளாகவும், போர்த் தெய்வமாகவும், யோகக் கடவுளராகவும் போற்றப்படு வதைப் போலவே யோகினிகளும் பல நிலைகளில் வைத்து வழிபடப்படுகின்றனர். இந்த நவராத்திரி நாளில் 64 யோகினிகளைப் போற்றுவோம்.

- பூசை.ச. அருணவசந்தன்

Tags : Yoginis ,
× RELATED அறிவைப் பெருக்கி நினைவாற்றல் கூட்டும் அஜவதனா