×
Saravana Stores

குரங்கு பெடல் – திரைவிமர்சனம்

‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ படங்களை இயக்கிய கமலக்கண்ணன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘குரங்கு பெடல்’. ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரடக்ஷன்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது. 1980 கால கட்டம் கத்தேரி கிராமம். மாரியப்பன் ( மாஸ்டர் சந்தோஷ்), நீதி மாணிக்கம் (மாஸ்டர் ராகவன்), செல்வம் (ஞானசேகர்), மணி( மாஸ்டர் சாய்கணேஷ்), அங்குராசு (மாஸ்டர் ரதீஷ்) ஆகிய ஐந்து சிறுவர்களுக்கு பள்ளி கோடை விடுமுறை. பேனா மை அடிக்கப்பட்ட சீறுடையுடன் வீட்டுக்கு வரும் சிறுவர்கள், கோடை விடுமுறையை எப்படி எல்லாம் கழிக்கப் போகிறார்கள் என திட்டமிட்டபடி வருகிறார்கள்.

எப்படியேனும் இந்த விடுமுறையில் சைக்கிள் ஓட்டிக் கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு எட்டணா என அப்பகுதி மிலிட்டரி (பிரசன்னா பாலசந்திரன்) கடையில் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டலாம் என முடிவு செய்கிறார்கள். ஆனால் மாரியப்பனின் தந்தை நடராஜா சர்வீஸ் கந்தசாமி(காளிவெங்கட்) அந்த ஊரிலேயே சைக்கிள் ஓட்டாமலும், வாங்காமலும் இருக்கும் பட்சத்தில் மாரியப்பனுக்கு காசு கிடைக்காமல் போகிறது. காசு தேடி அலைகிறார் சிறுவன் மாரியப்பன். நான்கு சிறுவர்கள் ஒன்றிணைந்து சைக்கிள் ஓட்டினார்களா இல்லையா, இவர்கள் சைக்கிள் ஓட்டும் ஆர்வம் எது வரை கூட்டிச் சென்றது என்பது மீதிக்கதை. படத்திற்கு உயிர் நாடி ஐந்து சிறுவர்கள்தான். 2கே குழந்தைகளுக்கு என்னவென்றே தெரியாத 90களுடன் முடிந்துவிட்ட குழந்தைப் பருவத்தையும், வாழ்வியலையும் கண் முன் காட்டி நம்மைக் கட்டிப் போடுகிறார்கள்.

அவர்களின் ஏக்கம், மொழி, இயல்பு என அத்தனையும் எந்த சினிமாத்தனமும் இல்லாமல் நம்மை வேறு ஒரு உலகுக்குக் கூட்டிச் செல்கிறது. தரி நெய்யும் காளி வெங்கட், அவரின் மனைவி சாவித்ரி, என அத்தனையும் இயல்பின் உச்சம். நிச்சயம் 80, 90 கால அப்பா, அம்மாக்களின் சூழல், அவர்களின் வாழ்க்கை , அளவான வருமானம், அதற்குள் குடும்ப ஓட்டம் என எங்கும் வருமையின் கொடுமையை எல்லாம் பேசாமல் அதற்குள் நிம்மதியான வாழ்வியலை எடுத்து வைத்த நிலை என பலவும் பால்ய நினைவுகளை ஞாபகத்துக்குக் கொண்டு வரும். ‘இம்புட்டு நாளா நாய் மாதிரி தெருத் தெருவா சுத்திட்டு கிடாந்தானுக, இப்போ வாடகை சைக்கிளை எடுத்துக்கிட்டு ஊர் ஊரா சுத்தப் போறானுக்க ‘ ‘ அப்படியே எல்லாத்தையும் வெட்டி முறிச்சாச்சு , இப்போ இது ஒண்ணுதான் குறைச்சல்‘ ‘வாடி கொட்டைய்க்கு போவோம்‘ என காளி வெங்கட் பேசும் வசனங்களும், நடிப்பும் படத்துக்கு மேலும் வலு கூட்டுகிறது.

கிணற்றில் பொத்தென குதிக்கும் பயலுக, சைக்கிளை அசால்ட்டாக ஓட்டிச் செல்லும் சீட்டிப் பாவடை சிறுமி, மிலிட்டரி நடத்தும் சைக்கிள் கடை, பக்கத்து ஊரில் கட்டிக் கொடுத்த அக்கா வீடு, கடன் கேட்டு நச்சரிக்கும் குடிகார கணேஷ், சேமியா ஐஸ் திங்கும் பணக்கார வீட்டுச் சிறுவன் நீதி மாணிக்கம், கோழி முட்டை திருட்டு, ஊர் சந்தை, மலைக் கோவில், மண்ணும் , கல்லும் கலந்த கிராமத்து கரிசல் சாலை, இட்லி குருமா, பொம்மலாட்டம் என பெரியவர்களுக்கு அவர்களின் சிறுவயது உலகமும், இப்போதைய தலைமுறைக்கு ஏக்கத்தை உண்டாக்கும் ஒரு வாழ்வியல் உணர்வையும் நிச்சயம் இந்தப் படம் கொடுக்கும். தனது முந்தையப் படங்கள் மூலம் தனி முத்திரைப் பதித்த இயக்குநர் கமலக்கண்ணன் இந்தப் படத்தின் மூலம் ‘பசங்க‘, ‘காக்கா முட்டை‘ போன்ற படங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கான படங்கள் இல்லாத வறட்சியை பூர்த்தி செய்திருக்கிறார்.

எவ்வித வன்முறையோ, சண்டையோ , கெட்ட வார்த்தைகளோ இல்லாத குடும்பங்களுக்கான ஒரு படம். அதற்கே சபாஷ். இன்னும் குழந்தைகளிடம் மிகச் சில இடங்களில் தோன்றும் செயற்கைத் தனமான நடிப்பை சற்றே குறைத்து இன்னும் வேலை வாங்கியிருக்கலாம். மேலும் சைக்கிள், மிலிட்டரி என படம் திடீரென ஓரிடத்தில் ஒரே மாதிரியான காட்சிகளால் தொங்குகிறது. அதை மட்டும் குறைத்திருக்கலாம்.
சுமீ பாஸ்கர் ஒளிப்பதிவில் 80களின் கிராமப்புறம் கண்முன் விரிகின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் நம் சைக்கிள் பழகிய காலங்கள், அதில் ஊர் சுற்றிய அனுபவங்கள் என அனைத்தையும் தூண்டி விடுகிறார் சுமீ. கொண்ட்டாட்டம் பாடல் ஜிப்ரான் இசையில் குழந்தையாகவே நம்மை மாற்றிவிடுகிறது.

பின்னணி இசையும் பல இடங்களில் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. மொத்தத்தில் கோடை விடுமுறைக்கு என்னப் படம் குடும்பத்துடன் பார்க்கலாம் என்றால் எந்த சந்தேகமும் இல்லாமல் ‘குரங்கு பெடல்‘ படம் தான் சரியான தேர்வு. என்னதான் டிஜிட்டல் உலகில் மூழ்கிக் கிடந்தாலும் இன்னமும் நம் இயல்பான வாழ்க்கை, குழந்தை பருவம் என இவற்றை எல்லாம் உயிர்ப்புடன் வைத்திருப்பது சைக்கிள் பயிற்சி, நிச்சல் போன்றவைகள்தான். என்னும் நிலையில் எக்காலம் கடந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த சைக்கிள் பழகிய தருணம் மட்டும் ஒரு கதையாக இன்றும் இருக்கும் பட்சத்தில் இந்தப் படம் அத்தனை தலைமுறைக்கும் பொருந்தும்.

The post குரங்கு பெடல் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamalakannan ,Madhubanakadai ,Vattam ,Rasi Alagappan ,Kali Venkat ,Santhosh Velumurugan ,VR Raghavan ,M. Gnanasekar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தாம்பரம் மாமன்ற கூட்டம்: அதிகாரி மீது கவுன்சிலர் புகார்