×

ஆனந்தனுக்கு 1000 நாமங்கள்

91. அஹ்நே நமஹ  (Ahney namaha)

விப்ரநாராயணர் என்ற வைணவர் கும்பகோணத்துக்கு அருகே உள்ள திருமண்டங்குடி என்ற ஊரில் அவதரித்தவர். அவருக்கு இளமை முதலே திருவரங்கநாதனிடத்தில் மிகுந்த பக்தி உண்டு. அந்த அரங்கனுக்கு நந்தவனம் அமைத்துப் பூக்களை மாலையாகத் தொடுத்து சமர்ப்பித்துத் தொண்டு செய்ய விரும்பித் திருவரங்கத்தை அடைந்து அவ்வாறே பிரம்மச்சாரியாகவே தன் வாழ்வைக் கழித்து வந்தார்.

உத்தமர்கோவிலைச் சேர்ந்த தேவதேவி என்னும் நடன மாது உறையூரில் உள்ள சோழனின் அரசவைக்கு வந்து ஆடல் பாடல்களை நிகழ்த்தி மன்னரை மகிழ்வித்தாள். ஊர் திரும்பும் வழியில் விப்ரநாராயணரின் நந்தவனத்தைக் கண்டாள். அதன் அழகால் ஈர்க்கப்பட்டு உள்ளே வந்தாள். தன் கைங்கரியத்திலேயே லயித்திருந்த விப்ரநாராயணர் தேவதேவியின் அழகையும் அலங்காரத்தையும் ஏறிட்டும் பார்க்கவில்லை.

இதனைக் கவனித்த தேவதேவியின் தங்கை, “உன் அழகின் வலிமை அவ்வளவுதானா?” என்று ஏளனம் செய்தாள். அவமானம் அடைந்த தேவதேவி, “இவரை எப்படியும் மயக்கியே தீருவேன்!” என்று சபதமிட்டாள். தான் அணிந்திருந்த நகைகளையும், அலங்காரத்தையும் நீக்கினாள். எளிமையான பெண்ணின் உருவத்தைக் கொண்டாள். தானும் திருமால் பக்தை என்றும், விப்ரநாராயணரோடு இணைந்து திருமாலுக்குத் தொண்டு செய்ய விரும்புவதாகவும் அவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். அவரும் சம்மதிக்கவே, அன்று முதல் அவரது குடிலில் இவளும் இருந்து கொண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தாள்.

ஒருநாள் கனமழை பொழிந்தது. மழையில் சொட்டச் சொட்ட நனைந்த தேவதேவி அதே கோலத்தில் குடிலுக்குள் நுழைந்தாள். உள்ளே வந்த அவளின் அழகில் மயங்கிய விப்ரநாராயணர், தன் வசம் இழந்தார். அவள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டார். திடீரென ஒருநாள் தன் தாயைப் பார்த்துவிட்டு, உடனடியாக வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுத் தேவதேவி சென்றாள். நாட்கள் கடந்தன. அவள் வரவில்லை. தேவதேவியைப் பிரிந்த துயர் தாங்காமல் விப்ரநாராயணர் அவளைத் தேடிக்கொண்டு உத்தமர்கோவிலுக்குச் சென்றார். அவளது மாளிகை வாசலில் உள்ள காவலாளிகளிடம் தேவதேவியைப் பார்க்க அனுமதிக்குமாறு வேண்டினார்.

அவளோ செல்வச் செழிப்பில் ஊறியவள். வெறுங்கையோடு வந்த அவரை விரட்டி அடிக்குமாறு உள்ளிருந்தபடி உத்தரவிட்டாள். விப்ரநாராயணரோ வேறு புகலிடம் தெரியாமல், அவள் வீட்டு வாசலிலேயே அமர்ந்து விட்டார். அவரது நிலையைக் கண்டு மனமிரங்கிய அரங்கன் ஒரு லீலை செய்தான். அழகிய மணவாளதாசன் என்ற இளைஞனாக வேடமிட்டுக் கொண்டு தன் கோயிலில் உள்ள தங்கவட்டிலை எடுத்து வந்து தேவதேவியிடம் அளித்து, விப்ரநாராயணர் கொடுத்தனுப்பியதாகச் சொன்னான். அவளும் அதை வாங்கிக் கொண்டு விப்ரநாராயணரை உள்ளே அழைத்துவரும்படிக் காவலாளியிடம் சொன்னாள்.

மறுநாள் காலை கோயிலில் தங்கவட்டிலைக் காணவில்லை என்று மன்னனுக்குப் புகார் சென்றது. காவலர்கள் தேடியபோது அது தேவதேவியின் இல்லத்தில் இருந்ததை அறிந்தனர். தேவதேவி ஒரு பாவமும் அறியாத விப்ரநாராயணரைக் கைகாட்ட, இருவரையும் காவலர்கள் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட விப்ரநாராயணர் தன்னைக் காத்தருளும்படி அரங்கனிடம் மனமுருகி வேண்டினார். அரங்கன் மன்னர் கனவில் தோன்றி, தன் பக்தனுக்காக இந்த லீலையைத் தானே செய்ததாகக் கூறி, விப்ரநாராயணரை விடுவிக்கச் சொன்னார். மன்னரும் விடுவித்தார்.

இதுவரை தான் செய்த பாபங்கள் நீங்குவதற்காக, திருமாலின் தொண்டர்களது ஸ்ரீபாத தீர்த்தத்தை உட்கொண்டார் விப்ரநாராயணர். அன்று முதல் விப்ரநாராயணர் என்ற பெயர் மறைந்து ‘தொண்டரடிப் பொடியாழ்வார்’ என்ற திருநாமம் அவருக்கு ஏற்பட்டது. இவ்வாறு தான் வழிதவறிச் சென்றபோதும் தன்னைக் கைவிடாமல் பின் தொடர்ந்து வந்து அரங்கன் காத்தமையைத் தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையில் பாடுகிறார்.

“சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும் வலையுள்பட்டு அழுந்துவேனைப்
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்கமன்றே”

ஒருபோதும் தன் அடியார்களைக் கைவிடாமல் காத்தருள்வதால் திருமால் ‘அஹ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 91-வது திருநாமம். “அஹ்நே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை என்றும் திருமால் கைவிடமாட்டார்.

92. ஸம்வத்ஸராய நமஹ (Samvatsaraaya namaha)

பிள்ளை லோகாசிரியர் என்னும் வைணவ ஆச்சாரியர், தம்முடைய ஸ்ரீவசன பூஷணம் என்னும் நூலில் விஷ்ணுதர்மத்திலுள்ள ஒரு கதையை மேற்கோள் காட்டியுள்ளார். காசியின் அரசனான காசிராஜனுக்கு முந்நூறு மனைவிகள். அவர்களுள் லலிதா என்பவள் பட்டமகிஷியாகத் திகழ்ந்தாள். அவள் அரசனின் மற்ற மனைவிகளைக் காட்டிலும் அழகு, பொலிவு, நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவளாக விளங்கினாள். பகலிரவு பாராமல் எப்போதும் கோயிலுக்குச் சென்று இறைவனுக்குத் தொண்டு செய்தபடி  தன் வாழ்வைக் கழித்து வந்தாள்.

மற்ற மனைவிகள் லலிதாவிடம், “நீ மட்டும் எப்படி எங்களைவிட வடிவிலும் குணத்திலும் சிறந்தவளாக விளங்குகிறாய்?” என்று வினவினர். “அதற்கு என்னுடைய முந்தைய பிறவியில் நான் செய்த புண்ணியமே காரணம். மைத்ரேய ரிஷியின் அருளால் என் முன் பிறவியைப் பற்றிய செய்தியை நான் அறிந்து கொண்டேன். அதைச் சொல்கிறேன்! கேளுங்கள்!” என்று சொல்லித் தன் முன் ஜென்ம வரலாற்றைக் கூறலானாள். சௌவீர மன்னர், திருமாலுக்கு ஒரு கோயில் கட்ட விரும்பினார். தனது புரோகிதரான மைத்ரேயரைக் கொண்டு,

தேவியாற்றங்கரையில் சிறப்பாகக் கோயிலைக் கட்டி முடித்தார். அதன் அருகிலேயே தனது அரண்மனையையும் அமைத்துக் கொண்டு தினமும் இறைவனுக்கு மலர்கள், தூபம், தீர்த்தம் முதலியவற்றைக் கொண்டு வந்து சேர்த்து தொண்டு செய்தார். கார்த்திகை மாதத்தில் ஒருநாள் மாலை மன்னர் தீபம் ஏற்றிவிட்டுச் சென்றார். இரவுப் பொழுதில் அந்தத் தீபம் அணையும் நிலையில் இருந்தது. அந்தக் கோயிலில் வாழ்ந்து வந்த எலி, அணையப் போகும் தீபத்தின் திரியைக் கொண்டு செல்ல நினைத்துத் தீபத்தின் அருகே சென்று திரியைக் கவ்வியது.

அந்தச் சமயம் அங்கிருந்த ஒரு பூனை ஒலி எழுப்பிடவே, அதைக் கண்டு அந்த எலி நடுங்கியது. அதனால் அதன் வாயில் கவ்வியிருந்த திரி தூண்டப்பட்டு, அணையும் நிலையில் இருந்த தீபம், பிரகாசமாக எரியத் தொடங்கியது. திரியைக் கவ்விச் செல்வதே நோக்கமாக இருந்ததே தவிர, தீபத்தைத் தூண்டி எரிய வைக்க வேண்டும் என்றோ, இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றோ அந்த எலிக்கு நோக்கமில்லை. ஆனாலும் அதன் செயலைத் தனக்குச் செய்த தொண்டாகக் கருணையுடன் ஏற்றுக்கொண்ட திருமால், “நீ அடுத்த பிறவியில் பேரரசியாகப் பிறப்பாய்.

குறை ஒன்றும் இல்லாதவளாக, அனைத்து நற்பண்புகளும் நிறைந்தவளாக விளங்குவாய்!” என்று அருள்புரிந்தார். “நான்தான் அந்த எலி! தெரியாமல் செய்த புண்ணியத்தின் பயனாய் இப்பிறவியை அடைந்துள்ளேன். தெரியாமல் தீபத்தைத் தூண்டியதற்கே இவ்வளவு புண்ணியம் கிட்டும் என்றால், தினந்தோறும் பெருமாள் சந்நதியில் விளக்கேற்றி அவருக்குத் தொண்டு செய்பவர்கள் அடையும் உயர்ந்த நிலையைப் பற்றி என்னவென்று சொல்வது?” என்று கூறினாள் லலிதா.

இவ்வாறு கோயில்கள் தோறும் எழுந்தருளியிருந்து, ஏதோ ஒரு காரணத்துக்காக அவனிடம் நாம் வர மாட்டோமா எனக் காத்திருந்து, தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் செயல்களைக்கூட தனக்குச் செய்த தொண்டாகக் கருதி அருள்புரிவதால் திருமால் ‘ஸம்வத்ஸரஹ’ என்றழைக்கப்படுகிறார். அதாவது என்றால் வருகைக்காகக் காத்திருப்பவர் என்று பொருள்.

வேதாந்த தேசிகன் இக்கருத்தை ஓர் அழகான பாடலில் கூறுகிறார்.
“தன்நினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார்
நினைவனைத்தும் தான் விளைத்தும் விலக்கு நாதன்
என்நினைவை இப்பவத்தில் இன்று மாற்றி
இணையடிக்கீழ் அடைக்கலமென்று எம்மை வைத்து
முன்நினைவால் முயன்ற வினையால் வந்த
முனிவயர்ந்து முத்தி தர முன்னே தோன்றி
நன்நினைவால் நாம் இசையுங் காலம் இன்றோ
நாளையோ ஓ என்று நகை செய்கின்றானே”

இவ்வாறு நம் வருகைக்காகவும், நாம் வந்தவுடன் நமக்கு அருள்புரிவதற்காகவும் காத்திருக்கும் திருமால் ‘ஸம்வத்ஸரஹ’ என்று ஸஹஸ்ரநாமத்தின் 92-வது திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். “ஸம்வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள் செய்யும் அனைத்து நற்செயல்களையும் தனக்குச் செய்யப்பட்ட தொண்டாக ஏற்று அதில் வெற்றி காணும்படித் திருமால் அருள்புரிவார்.

93. வ்யாலாய நமஹ (Vyaalaaya namaha)

சேதுக்கரையில் எழுந்தருளியிருந்த ராமனைச் சரண்புகுந்தான் விபீஷணன். அவனது வருகையை ராமனிடம் சென்று கூறிய சுக்ரீவன், “இது அரக்கர்களின் சதித்திட்டமாக இருக்கக்கூடும்! இவனை நம்பாதே!” என்றான். அனைத்து வானரர்களையும் அழைத்து அவரவர் கருத்துகளைக் கேட்டான் ராமன். “இவனை நன்கு பரிசோதிக்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது!” என்றான் வாலியின் மகனான அங்கதன். “ஓர் ஒற்றனின் மூலம் இவனைக் கண்காணித்தபின் முடிவெடுப்போம்!” என்றான் சரபன் என்னும் வானர வீரன். “இவன் வந்த நேரம் சரியில்லை. இவனைத் திருப்பி அனுப்பி விடலாம்!” என்றார் ஜாம்பவான்.

“முதலில் இவனையும் இவனுடன் வந்த நால்வரையும் முழுவதுமாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆடைகளுக்குள் ஆயுதங்களை இவர்கள் மறைத்து வைத்திருக்க வாய்ப்புண்டு!” என்றான் மைந்தன். தன்னுடைய வரலாற்றையே மறந்த சுக்ரீவன், “உடன் பிறந்த அண்ணனுக்கே துரோகம் இழைத்துவிட்டு வந்தவனை ஏற்றுக் கொள்ளவே கூடாது!” என்றான். இறுதியாக அனுமனின் முகத்தைப் பார்த்தான் ராமன். “நான் இலங்கைக்குச் சென்றிருந்த போது ராவணன் என்னைக் கொல்ல நினைத்தான். தூதுவனைக் கொல்லக் கூடாது என்று சொல்லி என் உயிரைக் காப்பாற்றியவன் இந்த விபீஷணன். இவன் நல்லவன். எனவே இவனை ஏற்றுக் கொள்ளலாம்!” என்றார் அனுமன்.

“என் உள்ளத்தில் உள்ளதை உங்களில் ஒருவர்கூட உணரவில்லையே!” என வருந்தினான் ராமன். “அனுமனே! நீ அவன் நல்லவன் என்பதால் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாய். வானரர்களே! அவன் தீயவன் என்பதால் ஏற்கலாகாது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் என் கருத்து யாதெனில் வந்திருப்பவன் நல்லவனாக இருந்தாலும் சரி, தீயவனாக இருந்தாலும் சரி, என்னைத் தேடி வந்தவனை ரட்சித்தே தீருவேன்!” என்று தன்னுடைய திருவுள்ளத்தை வெளியிட்டான் ராமன்.

“சுக்ரீவா! அவனை உடனே அழைத்து வா! ஒருவேளை ராவணனே விபீஷணனைப் போல மாறு வேடத்தில் வந்திருந்தாலும் அதற்காக அவனை அழைக்காமல் வெறுங்கையோடு திரும்பி வராதே! ராவணனே என்னைத் தேடி வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்!” என்றும் கூறினான். விபீஷணன் அழைத்து வரப்பட்டான். அப்போது அவனை நோக்கி ராமன் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. “இவ்வளவு நேரம் உன்னை வெளியே காக்க வைத்தமைக்கு என்னை மன்னித்துவிடு!” என ராமன் வேண்டுவது போன்ற தோரணை அந்தப் பார்வையில் வெளிப்பட்டது.

சில காலம் கழித்து, லக்ஷ்மணனும் விபீஷணனும் பேசிக் கொண்டிருந்த போது, லக்ஷ்மணன், “விபீஷணா! ராமன் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் திரும்ப இலங்கைக்கே அனுப்பி இருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்று கேட்டான். “ராமன் என்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என நான் நம்பினேன்!” என்றான் விபீஷணன். “எதை வைத்து அப்படி நம்பினாய்?” என்று கேட்டான் லக்ஷ்மணன்.

“உனக்குத் தமிழ் தெரியுமா?” என்று கேட்டான் விபீஷணன். “ஆம்! தெரியுமே! நாங்கள் வனவாசத்தில் அகஸ்தியரின் ஆசிரமத்தில் தங்கி இருக்கையில் அவரிடம் இருந்து தமிழ் கற்றோம்!” என்றான் லக்ஷ்மணன். “தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘யானை வாயில் நுழைந்த கரும்பு போல’ என்று. யானையின் வாயை ஒரு கரும்பு அடைந்து விட்டால் அது வெளியே வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அதைத் தின்று முடிக்காமல் யானை விடாது. இங்கே ராமன்தான் யானை.

பக்தர்கள் கரும்பு போல. கரும்பைக் கண்டால் யானை மகிழ்ச்சியடைந்து அதை இறுகப் பிடித்துக் கொள்வது போலத் தன் வாயிலைத் தேடிவந்த பக்தர்களை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டு காப்பாற்றியே தீருவான் ராமன்! இந்த ரகசியம் எனக்குத் தெரிந்ததால் தான் நம்பிக்கையோடு சரண்புகுந்தேன்,” என்றான் விபீஷணன்.இவ்வாறு தன்னைச் சரண்புகுந்த அடியவர்களை யானை கரும்பைப் பிடித்துக் கொள்வது போல இறுகப் பிடித்துக் கொண்டு கைவிடாமல் காத்தருளுவதால் திருமால் ‘வ்யாலஹ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 93-வது திருநாமம்.

“வ்யாலாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்ல பிரார்த்தனைகள் அனைத்தையும் திருமால் நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.

94. ப்ரத்யயாய நமஹ (Prathyayaaya namaha)

ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நட்பை உண்டாக்கினார் ஆஞ்ஜநேயர். வாலியைக் கொன்று கிஷ்கிந்தை ராஜ்யத்தைத் தனக்குப் பெற்றுக் கொடுத்தால், எழுபது வெள்ள வானர சேனையைக் கொண்டு சீதையைத் தேடித் தருவதாக ராமனிடம் சுக்ரீவன் வாக்களித்தான். ராமனும் அதற்கு இசைந்தான். ஆனால் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம். வாலியை வீழ்த்தும் அளவு வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான்.

துந்துபி என்ற அரக்கன் முன்னொரு சமயம் வாலியுடன் போர் புரிய வந்தான். அந்த துந்துபியைக் கொன்று அவனது சடலத்தை வாலி தூக்கி எறிந்த போது, அது ரிஷ்யமுக மலையில் சென்று விழுந்தது. அந்தச் சடலம் இருக்கும் இடத்துக்கு ராமனை அழைத்துச் சென்ற சுக்ரீவன், “ராமா! இது அன்று வாலி வீசி எறிந்த அரக்கனின் சடலம். இப்போது நீ இதை எடுத்து வீசு. நீ எவ்வளவு தூரம் வீசுகிறாய் என்பதைப் பார்த்து, உன் பலத்தையும் வாலியின் பலத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!” என்றான்.

அங்கே துந்துபியின் சடலத்தில் சதையெல்லாம் அழுகிப் போய் எலும்புக் கூடு மட்டுமே இருந்தது. உறவினர்கள், மருத்துவர்களைத் தவிர வேறு யாரேனும் இன்னொருவரின் எலும்பைத் தொட்டால் தீட்டு உண்டாகும். அந்தத் தீட்டு நீங்கத் தனி பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதனால் அதைத் தொட்டுத் தூக்கி வீச ராமன் தயங்கினான். அப்போது லக்ஷ்மணன், “அண்ணா! உங்கள் இடது திருவடியின் கட்டை விரலால் நெம்பி விடுங்களேன்! தீட்டு ஏற்படாது!” என்றான். ராமனும் அப்படியே தன் இடது திருவடியின் கட்டை விரலால், பூமியைக் கடந்து அப்பால் செல்லும்படி துந்துபியின் எலும்புக் கூட்டை நெம்பி விட்டான்.

(திருமால் திரிவிக்கிரமனாக உலகளந்த போது, அவரது இடது திருவடி பிரம்மாவின் சத்ய லோகத்தை அடைந்தது. அப்போது பிரம்மா தன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் அந்தத் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அவ்வாறு அபிஷேகம் செய்கையில், அந்த இடது திருவடியின் கட்டை விரலில் இருந்து புறப்பட்டுப் பூமிக்கு வந்தது தான் கங்கை நதி. அனைத்து தோஷங்களையும் போக்கும் கங்கையின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பதால் ராமனின் இடது திருவடிக் கட்டை விரலுக்கு மட்டும் எலும்பைத் தொட்டாலும் தீட்டு ஏற்படாது என்பதை அறிந்து லக்ஷ்மணன் இவ்வாறு கூறியுள்ளான்.)

சுக்ரீவனோ, “ராமா! என்ன இருந்தாலும் நீ எலும்புக் கூட்டைத்தான் தூக்கி வீசி இருக்கிறாய். வாலி இவன் உயிரோடு இருந்த காலத்திலேயே இவனைத் தூக்கி எறிந்தான். எனவே இந்த ஒரு செயலைக் கொண்டு உன்னால் வாலியைக் கொல்ல முடியும் என்று என்னால் நிச்சயிக்க முடியவில்லை! உனக்கு இன்னொரு பரீட்சை வைக்கப் போகிறேன்!” என்றான். “என்ன?” என்று ராமன் கேட்க, அருகில் இருந்த வனத்துக்கு அழைத்துச் சென்ற சுக்ரீவன், “ராமா! வாலி தன் வில்லில் இருந்து பாணம் போட்டால், அது பெருத்த சால மரத்தையே துளைக்கும். அவ்வாறு உன்னால் பாணம் போட முடியுமா?” என்று கேட்டான்.

ராமன் புன்னகை செய்தபடி தன் கோதண்டத்தில் பாணத்தைப் பூட்டி எய்தான். அது வரிசையாக ஏழு சால மரங்களைத் துளைத்துக் கொண்டு சென்றது. அதைக் கம்பனின் வரிகளில் காண்போம்.

“ஊழி பேரினும் பேர்வில அருங்குலக் கிரிகள்
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்றென”

பிரளயம் வந்தாலும் அழியாமல் நிற்கும் மேரு மலைகளைப் போல ஏழு மரங்கள் இருந்தன. ஆனால் அவ்வேழு மரங்களை நோக்கி ஏழு என்று சொல்லி ராமன் பாணத்தைச் செலுத்தினான். அந்த ஏழு என்ற ராமனின் வார்த்தையைக் கேட்டதும், ஏழு மலை, ஏழு கடல், ஏழு உலகம், ஏழு த்வீபம், ஏழு நதி என ஏழு என்ற எண்ணிக்கை கொண்ட அனைத்தும் அஞ்சினவாம். அத்தகைய பாணத்தால் ஏழு மரங்களையும் துளைத்தான் ராமன்.

அக்காட்சியைக் கண்டபின் தான் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் நம்பிக்கை உண்டானது. இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி அதை வளர்ப்பவராகத் திருமால் திகழ்வதால் ‘ப்ரத்யய:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 94-வது திருநாமம். தன்நம்பிக்கையை நாம் இழக்கும் போதெல்லாம் “ப்ரத்யயாய நமஹ:” என்ற திருநாமத்தைச் சொல்லித் திருமாலை வணங்கினால், அவர் அருளால் நமக்குத் தன்னம்பிக்கையும் தெய்வநம்பிக்கையும் புத்தணர்ச்சியும் உண்டாகும்.

95. ஸர்வதர்சநாய நமஹ (Sarvadarshanaaya namaha)

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், முன்ரோ என்ற ஆங்கிலேயர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி கோயிலிலிருந்து அரசுக்கு நிறைய வருமானம் வந்தபடியால், மாவட்ட ஆட்சியர் முன்ரோ அடிக்கடி திருமலைக்கு வருவார். அதிகார ஆணவம் மிகுந்தவரான அவர் திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டு வரும் பக்தர்களைப் பார்த்து, “ஏன் முடியை வெட்டுகிறீர்கள்? தலையையே வெட்டி இறைவனுக்குக் கொடுக்க வேண்டியது தானே?” என்று ஏளனம் செய்வார்.

லட்டு பிரசாதம் பெற்றுச் செல்லும் பக்தர்களைப் பார்த்து, “இப்படிச் சுகாதாரம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் தான் எல்லா வியாதிகளும் உண்டாகின்றன!” என்று சொல்வார். “கோவிந்தா! கோவிந்தா!” என்று கோஷம் செய்பவர்களைப் பார்த்து, “ஏன் இப்படி மது அருந்திய கரடி போலக் கத்துகிறீர்கள்? அந்தச் சிலை என்றாவது உங்கள் கோஷங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறதா?” என்று கேட்பார். நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு வருபவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் தினமும் ஹோலிப் பண்டிகை கொண்டாடுகிறீர்கள்? நெற்றியெல்லாம் சிவந்திருக்கிறதே!” என்பார்.

அந்த ஆட்சியருக்கு வேதாந்த தேசிகர் என்ற உதவியாளர் ஒருவர் இருந்தார். வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அவரை ஆட்சியர் அடிக்கடி ஏளனம் செய்வார். “உங்கள் தெய்வம் உங்களைக் காக்க வேண்டும் என்பதற்காக உங்கள் உடம்பில் பன்னிரண்டு இடங்களில் நாமம் இட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் கால்களில் நீங்கள் இடுவதில்லையே. உங்கள் கால்களைத் தெய்வம் காப்பாற்ற வேண்டாமா?” என்று கேட்பார்.

ஒருநாள் திருமலையில் பெருமாள் அமுது செய்த கிச்சடியைப் பக்தர்கள் உண்டு கொண்டிருக்கையில் அங்கு வந்த ஆட்சியர், “செப்பு பாத்திரத்தில் தயாரிக்கப்பட்ட சுகாதாரமற்ற உணவுகளை உண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்பதை அறியாமல் இப்படி உண்கிறீர்களே!” என ஏளனம் செய்தார். அன்று மாலை அலுவலகம் திரும்பிய முன்ரோ, “ஐயோ! ஐயோ!” என்று கத்தினார். திடுக்கிட்டு அவரது அறைக்கு ஓடிய உதவியாளர் வேதாந்த தேசிகன், வயிற்று வலியால் ஆட்சியர் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

“உடனே மருத்துவரைக் கூப்பிடு!” என்றார் ஆட்சியர். மருத்துவர் ஊதா நிற மருந்தையும் சில மாத்திரைகளையும் கொடுத்து விட்டுச் சென்றார். ஆனால் வயிற்று வலி அதிகரித்துக் கொண்டே போனது. இன்னும் பற்பல மருத்துவர்கள் வந்து பலவிதமான ஊசிகளைப் போட்ட போதும் வயிற்று வலி மேலும் மேலும் அதிகரித்தது. ஆட்சியர் படும் பாட்டைக் கண்ட வேதாந்த தேசிகன், இந்த நோய் திருமலையப்பனின் அருளால் மட்டுமே குணமாகும் என உணர்ந்தார்.

ஆட்சியரிடம், “ஐயா! நீங்கள் சம்மதித்தால் நான் ஒரு மருந்து தருகிறேன்!” என்றார் வேதாந்த தேசிகன். “எதை வேண்டுமானாலும் கொடு! வயிற்று வலி குணமானால் போதும்!” என்றார் ஆட்சியர். “திருமலையப்பனுடைய துளசியையும் தீர்த்தத்தையும் தான் நான் தரப்போகிறேன். நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டார். தான் அந்தப் பெருமாளையும் அவரது அடியார்களையும் ஏளனம் செய்ததே தனது துன்பத்துக்குக் காரணம் என உணர்ந்த ஆட்சியர், “கொண்டு வா!” என்றார். “கோவிந்தா!” என உச்சரித்தபடி துளசியையும் தீர்த்தத்தையும் உட்கொண்டார். சில நிமிடங்களிலேயே வலி கொஞ்சம் குறையத் தொடங்கியது.

தொடர்ந்து சில நாட்கள் அவற்றை உட்கொண்டவாறே ஆட்சியர் பூரணமாகக் குணமடைந்தார். பெருமாளின் பிரசாதத்தின் மகிமையை உணர்ந்த அவர், அடிக்கடி கோயிலுக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்தார். யாரேனும் திருமலையப்பனின் பிரசாதம் கொண்டு செல்வதைப் பார்த்தால், “எனக்கும் கொஞ்சம் தாருங்கள்!” எனக் கேட்கத் தொடங்கினார். ஒருநாள் கோயிலில் ஆட்சியரைக் கண்ட ஒரு பக்தர், “செப்புப் பாத்திரத்தில் செய்த கிச்சடி சுகாதாரமற்றது என்றீர்களே! இப்போது உங்கள் வயிற்று வலியைக் குணப்படுத்திய பெருமாளுக்காக நீங்கள் ஒரு வெள்ளிப் பாத்திரம் வாங்கித் தரலாமே! அதில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கலாமே!” என்றார்.

அதைக் கேட்ட முன்ரோ தனது சொந்த செலவில் வெள்ளி கங்காளம் வாங்கிக் கொடுத்தார். அது இன்றும் திருமலையில் ‘முன்ரோ கங்காளம்’ என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு இறைநம்பிக்கை இல்லாத முன்ரோ போன்றவர்களுக்கும் தனது மேன்மைகளைக் காட்டி அவர்களையும் வசீகரிப்பதால் திருமால் ‘ஸர்வதர்சனஹ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 95-வது திருநாமம். “ஸர்வதர்சனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எம்பெருமான் தனது அனைத்து மேன்மைகளையும் நன்கு காட்டி அவர்கள் வாழ்வில் மேன்மை அடைய அருள்புரிவார்.

திருக்குடந்தை டாக்டர் உ.வே.வெங்கடேஷ்

(தொடர்ந்து நாமம் செய்வோம் )

Tags : Anandan ,
× RELATED பறக்கும் படை சோதனையில் கஞ்சா பறிமுதல்