×

ரூ.1,627 கோடியில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குமரியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார்.  “பாரத்நெட்” திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் “கண்ணாடி இழை கம்பி வடம்” மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இத்திட்டம், தமிழ்நாடு அரசின் “தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்” என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 ஜிபிபிஎஸ் அளவிலான அலைக்கற்றை அனைத்து 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்படும். இத்திட்டம் நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, தொகுப்பு ஏ-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு பி-ல் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு சி-ல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்பத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு டி-ல் கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் செயல்படவுள்ளது.இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம், இணையதள இணைப்பின் மூலம் வழங்கப்படும் சேவைகளான Triple play service (தொலைபேசி, தொலைக்காட்சி & இணையம்) ஆகியவற்றை வழங்க இயலும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினைப் பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும். அதோடு, புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை மேன்மையடையவும் இத்திட்டம் வழி வகுக்கும். தமிழகத்தின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளைப் பெறவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல்தொழில்நுட்ப திறன் இடைவெளியைக் குறைக்கவும் இத்திட்டம் உதவிடும். இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு, தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கமல் கிஷோர், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ஜெரார்ட் ரவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post ரூ.1,627 கோடியில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குமரியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Bharatnet ,Kumari ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,Tamil Nadu ,Muthalakurichi Gram Panchayat ,Kanyakumari district ,CM ,Stalin ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...