×

ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ள அண்ணாநகர் டவர் பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை: துணை மேயர் தகவல்

அண்ணாநகர்: சென்னை மாநகரில் 50 ஆண்டு பழமையான பூங்காக்களில் அண்ணா நகர் டவர் பூங்காவும் ஒன்று. அண்ணா நகரின் மையப்பகுதியில் 15.5 ஏக்கர் பரப்பில் இந்த பூங்கா பரந்து விரிந்துள்ளது. அதிகாரபூர்வமாக ‘டாக்டர் விஸ்வேஸ்வரர் டவர் பார்க்’ என்று அழைக்கப்படும் பூங்கா, மரங்கள், குளம், செடி வகைகள், புல் தரைகள்  உள்ளிட்டவற்றால், பச்சை பசேல் என உள்ளது. இது மட்டுமல்லாமல், கலையரங்கம், விளையாட்டு உபகரணங்கள் என, சென்னை மாநகராட்சியால் பூங்கா சிறப்பாக  பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த பூங்கா, அண்ணாநகர் மட்டுமல்லாமல் சென்னை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்கி வருகிறது. இங்குள்ள ‘டவர்’ எனப்படும் கோபுரம் 138 அடி உயரம் மற்றும் 42 மீட்டர் அகலம் உடையது. இது சென்னையின் உயரமான பூங்கா கோபுரம் ஆகும். கடந்த 1968ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த டவர் பூங்கா, அப்போது முதல், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. அன்றைய காலகட்டத்தில், இந்த கோபுரத்தின் வாயிலாக, சென்னையின் மத்திய பகுதியை முழுமையாக கண்டுகளிக்க முடிந்தது. காலப்போக்கில், கோபுரத்தின் மீது ஏறி காதல் ஜோடிகள் தற்கொலை செய்வது அதிகரித்தது. இதனால், கடந்த 2011ல் கோபுரத்தின் மேல் ஏற பொதுமக்களுக்கு மாநகராட்சி தடை விதித்தது. கடந்த 10 ஆண்டுகளாக பூங்கா ‘டவர்’ பூட்டியே  கிடக்கிறது. இதையடுத்து பூங்காவில் நடைபயணம் மேற்கொள்ளும் மக்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் என பலரின் கோரிக்கையடுத்து, டவர் பூங்காவை நவீன வசதிகளுடன் புனரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க மாநகராட்சி  முடிவு செய்தது. இதற்காக, ரூ.40 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோபுரத்தின் மேலே ஏறிச்செல்லும் போது, யாரும் தவறி  கீழே விழுந்து விடாத வகையில் பாதுகாப்புகள் செய்யப்பட்டு உள்ளன. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  திறக்கப்படு உள்ளது. இந்தநிலையில், பூங்கா சீரமைப்பு பணிகளை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் கூறும்போது, ‘‘அண்ணாநகர் டவர் பூங்காவில் பேட்மிட்டன் மைதானம், நடைபயிற்சிக்கான இடம், குழந்தைகள் விளையாட்டு திடல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப, இதனைப்புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்’’ என்றார்….

The post ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ள அண்ணாநகர் டவர் பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை: துணை மேயர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Annanagar Tower Park ,Anna Nagar ,Anna Nagar Tower Park ,Chennai ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை