×

நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட நகர காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள நடைபாதையில் கடந்த 4 தலைமுறைகளாக ஏராளமானோர் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். இந்த நடைபாதை கடைகள் கடந்த 13ம் தேதி அன்று நகராட்சி ஆணையர் தலைமையில், காவல்துறை உதவியோடு அகற்றப்பட்டது. இந்நிலையில்,  அதே இடத்தில் அடுத்த ஒரே வாரத்தில் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. இக்கடை வியாபாரிகளுக்கு மாற்று இடமாக, பழைய விருந்தினர் மாளிகையை இடித்து உழவர் சந்தை கடைகளோடு கழிப்பறை, குடிநீர் வசதி, லாரிகள் உள்ளே சென்று காய்கறிகளை இறக்கும் வகையில், அனைத்து வசதிகளையும் இந்நகராட்சி  செய்து கொடுத்தது. ஆனால், இந்த நடைபாதை வியாபாரிகள் பழைய இடத்துக்கே  செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். மேலும், புதிய இடத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக,  நகராட்சி ஆணையரிடம் காவல்துறை முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, நகராட்சி நிர்வாகம் காலி பண்ணியே ஆக வேண்டும் என வியாபாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்தது. நடைபாதை கடை வியாபாரிகளுக்கு கடைகளை காலிபண்ண நகராட்சி நிர்வாகம் சார்பில் கொடுத்த காலஅவகாசம் முடிந்த நிலையில், மீண்டும் கடந்த மாதம் 19ம் தேதி கடைகளை அகற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கடைகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் தலைமையில்  நடைபாதை கடைகளை இடித்து அகற்றும் பணி  நடைபெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு துறையினர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த 2 பெண்களையும் மீட்டனர். இதுதொடர்பாக, வழக்குபதிவு செய்த நகர போலீசார் 4 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க. டிஎஸ்பி தலைமையில் ஏராளமான  போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.இதுகுறித்து, ஆணையர் மல்லிகா கூறுகையில், ‘‘கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் வியாபாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என வியாபாரிகளுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார்….

The post நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: செங்கல்பட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalputtu ,Chengalputtu Municipality ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து