வாஷிங்டன்: அமெரிக்காவில் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய், ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை குணப்படுத்தும் டோஸ்டர்லிமாப் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டோஸ்டர்லிமாப் மருந்தை வைத்து சோதனை செய்யப்பட்ட அனைவரும் புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் மிகச்சிறிய அளவிலானவர்களே பங்கேற்றுள்ளனர்.இவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல் டோஸ்டர்லிமாப் மருந்து கொடுத்து நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர். மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் நோயாளிகள் முற்றிலுமாக புற்றுநோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.மேலும் சிகிச்சை அளிக்கப்பட்டது 25 மாதங்களுக்கு பிறகு நோயாளிகளுக்கு மீண்டும் புற்றுநோய் செல்கள் எதுவும் தோன்றவில்லை என டோஸ்டர்லிமாப் மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாஸ்கோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு கட்டுரையை எழுதியுள்ள டாக்டர் ஆண்ட்ரியா செரிக் இந்த மருந்து சிறப்பாக செயல்படுகிறது என கூறியுள்ளார்.புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து 3 வாரங்களுக்கு ஒருமுறை என 6 மாதங்களுக்கு செலுத்தப்படும். இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அடையாளப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற சிகிச்சைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் டோஸ்டர்லிமாப் சிகிச்சை பக்க விளைவுகளை எதையும் ஏற்படுத்தவில்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு ரூ.9 லட்சம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த மருந்து எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதில் சில சந்தேகங்கள் உள்ளதால் அதை பற்றிய கூடுதல் ஆய்வுகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது….
The post புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு! appeared first on Dinakaran.