×

கோகுல்ராஜ் ஆணவக் கொலையில் ஆயுள் தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்க முடியாது: யுவராஜ் அப்பீல் மனு விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, யுவராஜின் அப்பீல் மனு மீதான விசாரணையை ஐகோர்ட் கிளை தள்ளி வைத்தது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். கடந்த 23.6.2015ல் கோகுல்ராஜ் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்பாதை அருகே கொலையாகி கிடந்தார். இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அருண், குமார் (எ) சிவக்குமார், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு (எ) ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ் ஆகிய 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கோகுல்ராஜின் தாய் சித்ரா தொடர்ந்த வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை, மதுரை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) கடந்த 8.5.2019ல் மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 8ல் தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம், முதல் குற்றவாளியான யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை விதித்து, சாகும்வரை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டது. இதேபோல் அருண், குமார் (எ) சிவக்குமார், சதீஷ்குமார், ரகு (எ) ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள்தண்டனையை சாகும்வரை அனுபவிக்கவும், சந்திரசேகரன், பிரபு மற்றும் கிரிதருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும் விதித்தது.இந்த தண்டனையை எதிர்த்தும், தண்டனையை நிறுத்தி வைத்து தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலையான கோகுல்ராஜின் தாய் சித்ரா, நீதிபதிகள் முன் ஆஜரானார். நீதிபதிகள், சித்ராவை பார்த்து, ‘‘உங்களுக்கு இந்த வழக்கை நடத்த வசதி இல்லாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையத்தின் மூலம் இந்த நீதிமன்றமே வழக்கறிஞரை நியமிக்க தயாராக உள்ளது. தங்களின் விருப்பம் என்ன’’ என்றனர்.அதற்கு சித்ரா, ‘‘நாங்களே தனியாக வழக்கறிஞரை வைத்துக் கொள்கிறோம். ஆனால், இவர்கள் கொடூரமான கொலையை செய்துள்ளனர். இவர்களது தண்டனையை ரத்து செய்யவோ, ஜாமீன் வழங்கவோ கூடாது. அவர்களின் தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘ஏற்கனவே இவர்களது ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியாகியுள்ளது. இந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க முடியாது. தண்டனையை எதிர்க்கும் பிரதான அப்பீல் மனுவின் மீது விசாரணையை நடத்தலாமே’’ என்றனர். இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் கோரும் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பிரதான மனு மீதான விசாரணையை ஜூலை 6க்கு தள்ளி வைத்தனர். …

The post கோகுல்ராஜ் ஆணவக் கொலையில் ஆயுள் தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்க முடியாது: யுவராஜ் அப்பீல் மனு விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kokulraj ,Kogulraj ,Yuvraj ,Madurai ,Dinakaraan ,
× RELATED கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை...