×
Saravana Stores

பணி நீக்கத்தை கண்டித்து 17 ஆண்டுகளாக போராட்டம் கலெக்டர் அலுவலகத்திற்கு தூக்குக் கயிற்றுடன் வந்தவரால் பரபரப்பு

நெல்லை : நெல்லை அருகே மதவக்குறிச்சியைச் சேர்ந்தவர் யாக்கோபு.  இவர் நேற்று கையில் தூக்குக் கயிற்றோடு கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்குள்ள வேப்பமரத்தில் தூக்குக் கயிற்றை மாட்டி, விளம்பர பதாகை ஏந்திக் கொண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட தனக்கு மீண்டும் பதவி வழங்காமல் இழுத்தடிப்பதைக் கண்டித்து கோஷமிட்டார். பின்னர் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தன்னை தூக்கிலிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். போலீசார் அவரை இடைமறித்து கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர்.அங்கு அவர் அளித்த மனு: நான் மதவக்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய நிலையில், கடந்த 2004ம் ஆண்டு கையாடல் எனக்கூறி என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி பணி நீக்கம் செய்துவிட்டனர். உண்மை நிலையை ஆராயாமல், பயனாளிகளை விசாரிக்காமல் எனது ஊராட்சி எழுத்தர் பணி பறிக்கப்பட்டது. இது தொடர்பாக நான் 17 ஆண்டுகளாக சட்டரீதியாக போராட்டம் நடத்தி வருகிறேன். சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநருக்கு மேல்முறையீடு செய்து 4 ஆண்டுகளாகியும் அந்த மனு நிலுவையில் உள்ளது.தொடர்ச்சியாக போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால் என் குடும்பம் வறுமையில் உள்ளது. நான் தனியார் வேலைக்கு செல்லவும், இந்த வழக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. வழக்குகளுக்கு செலவு செய்ததால் அதிக பணமும் செலவாகி விட்டது. நானும், எனது குடும்பமும் இப்போது நிர்க்கதியாக உள்ளோம். எனவே கலெக்டர் உண்மை நிலையை விசாரித்து எனக்கு நீதி வழங்க வேண்டும். இல்லையெனில் தூக்குக் கயிற்றில் என்னைத் தொங்க விட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனு அளிக்கும் நிகழ்ச்சியில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர்  மாரியப்பபாண்டியன், இயக்க நிர்வாகி தச்சை தங்கவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்ட யாக்கோபுவை போலீசார் தடுத்துநிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்….

The post பணி நீக்கத்தை கண்டித்து 17 ஆண்டுகளாக போராட்டம் கலெக்டர் அலுவலகத்திற்கு தூக்குக் கயிற்றுடன் வந்தவரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Jacob ,Madavakurichi ,Dinakaran ,
× RELATED கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண்கலெக்டர் அலுவலகம் முன் 3 குழந்தைகளுடன் தர்ணா