×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு.! பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை

பென்னாகரம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 7,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் தடை விதித்து கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு இன்று வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் கடந்த மாதம் 18ம் தேதி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை 7 நாட்கள் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 6,417 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10,410 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக, விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பை காட்டிலும் வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. நேற்று 114.63 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 114.75 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.34 டிஎம்சியாக உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு.! பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Okanagan ,Parisal ,Bennagaram ,Okenakal ,Mettur ,Okanagan Cauvery… ,Dinakaran ,
× RELATED மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு