×

சிதம்பரம் கோவிலில் அறநிலையத்துறை ஆய்வு தொடர்பாக தீட்சிதர்கள் அறநிலையத் துறைக்கு மீண்டும் கடிதம்

கடலூர்: சிதம்பரம் கோவிலில் அறநிலையத்துறை ஆய்வு தொடர்பாக தீட்சிதர்கள் அறநிலையத் துறைக்கு மீண்டும் கடிதம்  அனுப்பினர். சட்டப்பூர்வமான குழு ஆய்வுக்கு வந்தால் அனுமதிப்போம் என தீட்சிதர்கள் கூறிய நிலையில், தற்போது ஆய்வுக்கு வந்துள்ளது சட்டத்திற்குட்பட்ட குழு அல்ல என்று தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தது.அதனை விசாரிக்க அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்றும், நாளையும் விசாரிக்கும் என முன்னதாக கூறப்பட்டு இருந்தது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நேற்று தீட்சிதர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையடுத்து இன்று துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது. வரவு- செலவு பற்றி துணை ஆணையர் ஜோதி தலைமையில் ஆய்வு தொடங்கிய நிலையில் தீட்சிதர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தீட்சிதர்கள் அதிகாரிகளை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்ததோடு,  அவர்களிடம் கணக்கு விவரங்களையும் தர மறுத்ததால் அறநிலையத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பின்னர், அதிகாரிகள் கொண்டு வந்த நடராஜர் கோயில் தொடர்புடைய பதிவேடுகளை வெளியிலேயே வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில், தீட்சிதர்கள் அறநிலையத்துறைக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அளித்தனர். அதில், தற்போது ஆய்வுக்கு வந்துள்ளவர்கள் சட்டபூர்வமான குழுகள் அல்ல; சட்டபூர்வமான குழு வந்தால் நாங்கள் ஆய்வுக்கு அனுமதிப்போம். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைக்கு இந்த கோயில் நிர்வாகத்தில் அதிகாரம் இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. கோவிலின் நிர்வாகத்தின் கீழ் நிலச்சொத்துக்கள் ஏதும் இல்லை. இவை அனைத்தும் கோயில் சிறப்பு வட்டாட்சியர் வசமே உள்ளது. நடராஜர் கோவிலுக்கு அறநிலையத்துறை சட்டப்படி அதிகார வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்கள் தொடர்பான பதிவுகள் முறையான முறையில் பதிவு செய்யப்படுகிறது. அறநிலையத்துறை சட்டப்பிரிவு 38ன் கீழ் பராமரிக்கப்பட வேண்டிய முதன்மை பதிவேடுகள் இங்கு பதிவு செய்வது பொருத்தமற்றது. அதேபோல் 2006-ம் ஆண்டில் நடைபெற்ற சரிபார்ப்பு அறிக்கையானது இன்று வரை வழங்கப்படவில்லை, முந்தைய சரிபார்ப்பு அறிக்கையை வழங்காமல், தற்போது மீண்டும் சரிபார்ப்பு கோருவது எவ்வாறு சாத்தியமாகும்?. சரிபார்ப்பு மற்றும் தணிக்கையின் அதிகார வரம்பைக் கொண்ட சரியான முறையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது எங்களுடைய நோக்கம். ஆதலால் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கீழ்படிந்து, ஆய்வுக் குழுவை திரும்பப் பெற வேண்டும் என தீட்சிதர்கள் கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.    …

The post சிதம்பரம் கோவிலில் அறநிலையத்துறை ஆய்வு தொடர்பாக தீட்சிதர்கள் அறநிலையத் துறைக்கு மீண்டும் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Department of Dikshitras ,Department at Chidambaram Temple ,Cuddalore ,Dikshitras ,Department of Dikshitas ,Duct Department at Chidambaram Temple ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு