×

சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. விழாவின் 11ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும் தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசுவாமி பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை வகித்தார். பால. லோகாதிபதி, பையன்கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும் போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசுவாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு தண்ணீர் உட்பட பொருள்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். அவர்களுக்கு அய்யா வைகுண்டசாமி அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.திருத்தேர் பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்து இருந்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி, தூத்துக்குடி, குமரி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்ட நிகழ்ச்சி முன்னிட்டு தலைமைப் பதியின் முன் பகுதியில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெற்றது. இன்று (7ம் தேதி) அதிகாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது….

The post சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vaikasi ,Chamitopu Vaikuntasamy ,Tendamaraikulam ,Chamitopu Aiya Vaikuntasamy ,Vaigasi festival ,Vaigasi Festival of Chamidopu Vaikuntasamy Framework ,
× RELATED வரம் தரும் அம்பிகையர்