×

‘ஓய்வு பெறும் எண்ணமில்லை : தொடர்ந்து போராடுவேன்’ 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடால் பேட்டி

பாரிஸ்: ‘ஓய்வு பெறும் எண்ணமில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. தொடர்ந்து போராடவே விரும்புகிறேன்’ என்று ஆடவர் ஒற்றையரில் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ரஃபேல் நடால் கூறியுள்ளார்.பாரிசில் நேற்று நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பைனலில் ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடாலும், நார்வேயின் இளம் வீரர் காஸ்பர் ரூட்டும் மோதினர். 36வது வயதில் உள்ள ரஃபேல் நடாலின் ஆட்டத்திறனுக்கு, 23 வயதேயான காஸ்பர் ரூட்டால் ஈடு கொடுக்க முடியவில்லை. எதிர்ப்பே இல்லாமல் 6-3, 6-3, 6-0 என நேர் செட்களில் காஸ்பர் ரூட் சரணடைந்து விட்டார். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 22 ஆடவர் ஒற்றையர் பட்டங்களை வென்று, தொடர்ந்து நடால் முதலிடத்தில் உள்ளார். பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் அவர் 14 முறை சாம்பியன் பட்டம் வென்று, சிகரத்தில் உள்ளார். வெற்றிக்கு பின்னர் நடால் கூறுகையில், ‘‘நம்ப முடியவில்லை. இந்த 36வது வயதிலும் போட்டியில் என்னால் சாதிக்க முடிகிறது. என்னுடைய டென்னிஸ் வாழ்வில் இது மிக முக்கியமான மைதானம். இந்த மைதானத்தில் மீண்டும் ஒருமுறை வெற்றிக் கோப்பையுடன் நிற்பேன் என்று நானே நம்பவில்லை. டென்னிசில் இருந்து நிச்சயமாக ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. தொடர்ந்து போராடவே விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ரன்னர் கோப்பையை வென்ற காஸ்பர் ரூட் கூறுகையில், ‘‘என்னுடைய டென்னிஸ் வாழ்வில் இது மறக்க முடியாத ஒரு போட்டி. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நடாலின் விளையாட்டை டிவியில் பார்த்து ரசித்து வந்திருக்கிறேன். அவருடன் ஒரு கிராண்ட்ஸ்லாம் பைனலில் மோதுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதில் எனக்கு சந்தோஷம். பைனலில் இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடியிருக்கலாம். சரி, அடுத்த போட்டியில் பார்க்கலாம்’’ என்று தெரிவித்தார்….

The post ‘ஓய்வு பெறும் எண்ணமில்லை : தொடர்ந்து போராடுவேன்’ 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடால் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nadal ,Paris ,Aadavar ,
× RELATED பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி