×

காயங்களுடன் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி; மரத்தில் பரண் வீடு அமைத்து கண்காணிப்பு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயது ஆண் புலிக்குட்டி படுகாயங்களுடன் உடல் மெலிந்து நடமாடி வந்தது. இது குறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர், வலைவீசி அந்த புலிக்குட்டியை பிடித்தனர். பின்னர் மானாம்பள்ளி முகாமில் கூண்டில் அடைத்து புலிக்குட்டி பராமரிக்கப்பட்டு வந்தது. புலிக்குட்டியை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த புலிக்குட்டி முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்றதும், அந்த மோதலில் புலிக்குட்டியின் உடலிலும், வயிற்றிலும் முட்கள் குத்தி காயம் ஏற்பட்டதும், இதனால்தான் புலிக்குட்டி வேட்டையாட, உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் புலிக்குட்டியின் உடலில் இருந்த முள்ளம்பன்றியின் முட்களை அகற்றி காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து கூண்டில் அடைக்கப்பட்டு கடந்த 7 மாதமாக மருத்துவ கண்காணிப்பில் இருந்தது. பிடிபட்டபோது புலிக்குட்டி வெறும் 48 கிலோ எடை மட்டுமே இருந்தது. தொடர் சிகிச்சை மற்றும் இரையால் தற்போது 144 கிலோ எடையுடன் முழு உடல் நலத்துடன் கம்பீரமாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வனத்துறை தலைமை வன பாதுகாவலர் புலிக்குட்டியை ஆய்வு செய்தார். அதன்பின்னர் அதனை வனத்தில் விடுவிக்க வேட்டை பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். புலிக்குட்டிக்கு உணவளித்து வேட்டை பயிற்சியின்போது கண்காணிக்க, பிரமாண்ட கூண்டு அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.75 லட்சம் செலவில் அந்த திட்டம் தயாரிக்கப்பட்டது. இயற்கையான சூழலில் கூண்டு அமைத்து, அதற்கு வேட்டை திறன் மேம்படுத்த தேசிய புலிகள் ஆணையம் வழிகாட்டுதலின்படி கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கூண்டு அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில், மானாம்பள்ளி பீட்டில் அடர் வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள அந்த பெரிய கூண்டிற்கு புலி கொண்டு செல்லப்பட்டு, விடுவிக்கப்பட்டது.அதனை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு கேமரா, 2 அடுக்கு கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்வேலி பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது. சிறிய கூண்டில் இருந்து பிரமாண்ட கூண்டிற்குள் மாற்றப்பட்ட புலிக்குட்டி அந்த கூண்டில் ராஜ நடை நடந்தது. புதிய கூண்டிற்குள் சென்ற புலி நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதனை 24 மணி நேரமும் கண்காணிக்க மரத்தில் பரண் வீடு அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் புகாமல் இருக்க அகழியும் வெட்டப்பட்டு புலிக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. புலிக்குட்டி வேட்டையாட முழு பயிற்சி பெற்றதும் அடர்ந்து வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என்று தெரிகிறது….

The post காயங்களுடன் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி; மரத்தில் பரண் வீடு அமைத்து கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : WALBARA ,Mudeez Estate Bazaar ,Govai District Valbara ,Dinakaran ,
× RELATED மழையால் வெள்ளப்பெருக்கு கூழாங்கல் ஆற்றில் இறங்க தடை