×

ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம்

பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் ‘ஆடு ஜீவிதம்‘ (மலையாளத்தில் த கோட் லைஃப்). மலையாள எழுத்தாளர் பென்யாமின் (பென்னி டேனியல்) எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். பல மாதங்களாகவே இப்படத்திற்கு ஏகோபித்த எதிர்பார்ப்புகள் இருந்தன. மேலும் மலையாளத்திலிருந்து இங்கே வெளியான சில படங்கள் நல்ல வரவேற்பும் பெற்ற நிலையில் இந்தப் படத்திற்கு இரட்டிப்பு எதிர்பார்ப்புகள் வலுத்தன. எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? இந்த ‘ஆடு ஜீவிதம் ‘.

நஜீப் முகமது (பிரித்விராஜ் சுகுமாரன்) மற்றும் ஹக்கீம் (கே.ஆர். கோகுல்) ஆகியோர் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களுடன் கேரளாவில் இருந்து சௌதி அரேபியா வருகிறார்கள். படிப்பறிவு மிகக் குறைந்த நஜீம் மற்றும் ஹக்கீம் இருவரும் விமான நிலையத்தில் யாரைப் பார்ப்பது , எங்கே விசாரிப்பது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்க அங்கே வரும் ஒரு அரேபியர் இவர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு செல்கிறார். அரேபிய நகரத்தில் பந்தாவான வேலை, பகட்டான வாழ்க்கை ஓரிரு வருடங்களில் மனைவி, அம்மாவை வசதியாக வைத்துக்கொள்ளலாம் என்னும் ஆசைகளுடன் வந்த நஜீம் ஆள் நடமாட்டமே இல்லாத பாலைவனத்தின் ஒரு ஆட்டுத் தொழுவத்தில் இறக்கிவிடப்பட்டு அடிமையாக்கப் படுகிறார். உடன் வந்த ஹக்கீமும் வேறு ஒரு இடத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டுவிட மொழி தெரியாமல், சரியான உணவு கிடைக்காமல் அடிமையாக ஆடு மேய்க்கத் துவங்குகிறார் நஜீப். நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி, வருடங்களாகின்றன. வந்த நிலை மாறி, உடல் மெலிந்து நிற்கும் நஜீப்புக்கு மீண்டும் ஹக்கீமின் சந்திப்பு புது உத்வேகத்தைக் கொடுக்கிறது. அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். முயற்சி வெற்றியடைந்ததா?, பாலைவன வாழ்க்கை என்ன செய்தது, ஊர் வந்து சேர்ந்தார்களா? இல்லையா? என்பது மீதிக் கதை.

பிரித்விராஜ்… தேசிய விருது பட்டியலில் கடினமான போட்டியாளராக அடுத்த வருடம் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை. அந்த அளவிற்கு உடலை வறுத்தி, மெலிந்து, எலும்பு தெரியும் அளவிற்கு மாறியிருக்கிறார். அதிலும் படத்தின் துவக்கத்தில் குஸ்தியாளனாக தெரிவதற்காகவே உடலை சற்று பருமனாக மாற்றி, அதன்பின் மெலிந்து என நிறைய மெனெக்கெட்டிருக்கிறார். இந்த மெனெக்கெடலுக்கே முதல் பாராட்டுகள்.நடிப்பும் மிரட்டல். உடன் பயணிக்கும் கே.ஆர்.கோகுலில் நடிப்பும் சோடையில்லை, அவரின் மேக்கப் மற்றும் வளர்ந்த முடியும், தாடியுமாக தவிக்கும் இடமெல்லாம் கண்ணீர் தருணங்கள்தான். ஹைத்தி நாட்டு நடிகர் ஜிம்மி ஜீன் –லூயிஸ் இந்தப் படத்தில் தனி அந்தஸ்த்து பெறுகிறார். அமலா பால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நல்ல படம், நல்ல அங்கீகாரம்.

படத்தின் மிகப்பெரும் பலம் பின்னணி இசையும், விஷுவல் காட்சிகளும்தான். ‘ஓமனே‘ பாடல் ரஹ்மாஸ் ஸ்பெஷல் மெலோடியாக காதிலும், ‘பெரியோனே‘ பாடல் ரஹ்மான் மாஸ்டர் ரகமாக மனதிலும் இடம் பெறுகின்றன. சுனில் கே.எஸ் ஒளிப்பதிவில் சுட்டெரிக்கும் பாலைவனம் நம்மையும் வெப்பமாக்குகிறது. உடன் பின்னணி கலவை காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றன. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் , எடிட்டிங்கும் பல இடங்களில் அபாராம்.

‘ரெவெனென்ட்‘, ‘ சொசைட்டி ஆஃப் ஸ்னோ‘ போன்ற படங்கள் வந்துவிட்டதாலும் இந்தப் படம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அளவிற்கான உணர்வைக் கொடுக்கவில்லை. மேலும் படம் முழுக்க பாலைவன நடை மட்டுமே இருப்பதும் ஒரு காரணம். இது ஒரு ராவான வாழ்க்கைப் போராட்டக் கதை என்றாலும் வெகுஜன பார்வையாளனை ஈர்க்குமா என்னும் கேள்வி எழுகிறது. எனிமும் விருதுகளுக்குரிய பல சிறப்பம்சங்களும், ஏன் ஆஸ்கருக்கே முயற்சி செய்யலாம் போன்ற பல டெக்னிக்கல் மெனெக்கெடல்கள் படம் முழுக்க இருக்கின்றன.

மொத்தத்தில் நஜீப் என்னும் இளைஞனின் உண்மையான வாழ்வியல் போராட்டத்தை பதிவு செய்து வேலைக்காக வெளிநாடு செல்லுமிடத்தில் கவனம் தேவை என்னும் அலெர்ட் அடிக்கிறது இந்தப் படம். கலை ஆர்மும், மெனெக்கெடலும் ஒன்றிணைந்து ஒரு படத்திற்காக பிரித்விராஜ் என்னும் கலைஞனின் மெனெக்கெடலைக் காண நிச்சயம் தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது ‘ஆடு ஜீவிதம்‘.

The post ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aadu Jevitham ,Britviraj ,Blassi ,Benjamin ,Penny Daniel ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அக்கரன் விமர்சனம்