ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த கவியருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஆழியாற்று தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிகின்றனர். அதனை போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கவியரவி(குரங்கு அருவி) உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் ஆழியார் வருவோர், அருகே உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மழை இருக்கும் காலகட்டத்தில் அருவியில் தண்ணீர் அதிகளவில் வருவதால், அந்நேரத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை பல மாதமாக பெய்ததால், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் வரை கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.அதன்பின் வெயிலின் தாக்கம் அதிகரித்து மழையில்லாததால், பிப்ரவரி மாதத்தில் இருந்து தண்ணீர் வரத்து மிகவும் குறைய துவங்கியதுடன், மார்ச் மாதம் துவக்கத்தில் கவியருவியில் தண்ணீர் இன்றி வெறும் பாறையானது. இதையடுத்து வறட்சியின் காரணமாக, கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த மாதம் பல நாட்கள் பெய்த கோடை மழையால், பல மாதத்திற்கு பிறகு கவியருவியில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரிக்க துவங்கியது. ஆனால், கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையையொட்டி அருவியில் குளித்து மகிழும் எண்ணத்துடன் வந்த பலர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, தினமும் பள்ளி மாணவ,மாணவிகள் பெற்றோருடன் ஆழியார் அணைக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பலர் கவியருவிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அங்கு தடை நீடிப்பதால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்நிலையில், ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும், கோடை வெயிலை சமாளிக்கும் பொருட்டு ஆழியாற்று தடுப்பணையில் குளித்து மகிழ்கின்றனர். தடுப்பணைப்பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும், ஆற்றின் தடுப்பணை பகுதியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறங்கி குளித்து மகிழ்கின்றனர். நேற்று, ஆழியாற்று தடுப்பணையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தடுப்பணைகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அசாம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தடுப்பணைகளில் குளிப்பவர்களை கண்காணித்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், கவியருவியில் தண்ணீர் விழும் பட்சத்தில் அதில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post கவிருவியில் குளிக்க தடை எதிரொலி; தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கண்டுகொள்ளாத போலீசார் appeared first on Dinakaran.