×

சினிமா, பத்திரிகையில் தலைசிறந்து விளங்கியவர்களுக்கு கலைத்துறை வித்தகர், எழுதுகோல் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

சென்னை: சினிமா, பத்திரிகையில் தலைசிறந்து விளங்கியவர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருது மற்றும் எழுதுகோல் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள்  சாதனையாளருக்கு  கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3ம் தேதி வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இந்த விருதுக்காக, தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில்,  நடிகர் சங்கத் தலைவர் நாசர்,  திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, 2022ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (90) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கலைஞரின் பிறந்த தினமான இன்று (3ம் தேதி) ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூ.10 லட்சமும், வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.அதேபோன்று, 2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ‘கலைஞர் எழுதுகோல் விருது’க்கான தேர்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் 2021ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்(87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post சினிமா, பத்திரிகையில் தலைசிறந்து விளங்கியவர்களுக்கு கலைத்துறை வித்தகர், எழுதுகோல் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...