×

வேலூர் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு பார்மலின் கெமிக்கல் கலந்த மீன்கள் விற்பனையா?

அதிகாரிகள் ரெய்டில் 12 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்வேலூர் : வேலூர் மீன் மார்க்கெட்டில் பார்மலின் கெமிக்கல் கலந்த மீனகள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது அழுகிய 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.வேலூர்- பெங்களூரு சாலையில் புதிய மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 80 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 100 முதல் 150 டன் வரை மீன்கள் விற்பனையாகின்றன.இந்நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் விலையும் சற்று அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு சில நாட்களுக்கு முன்பு கொண்டு வந்த மீன்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்கப்படும் மீன்கள் அழுகிய நிலையில் இருப்பதாக கடந்த சில வாரங்களாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.இதனைத் தொடர்ந்து வேலூர் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் மற்றும் அதிகாரிகள் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு கடையாக சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களின் மாதிரிகளை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் பார்மலின் என்னும் இறந்த உடல்கள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர். அப்போது, கெட்டுபோன 12 கிலோ இறால் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ‘தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் வேலூர் மார்க்கெட்டிற்கு கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வர சில நாட்கள் ஆகும். இதனால் மீன்கள் கெடாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கல் கலந்து விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பார்மலின் கெமிக்கல் பயன்படுத்தவில்லை. ஆனால் கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் மட்டும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்த கடைக்கார்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ என்றார். கண்காணிப்பு அவசியம்பெரும்பாலான மக்களின் அன்றாட உணவாகவும் அத்தியாவசிய தேவையாகவும் உள்ளது மீன். இதில் பல வகை மீன்களை பல நாட்களாக வைத்து கெட்டுப்போய் துர்நாற்றம் வீசும் நிலையிலும் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. எதாவது ஒரு இடத்தில் அதிகாரிகள் சோதனை செய்தாலே மற்ற இடங்களில் உள்ள கடைகளில் இருக்கும் கெட்டுப்போன மீன்களை உடனே அப்புறப்படுத்தி விடுகின்றனர். எனவே புகார் வர வேண்டும் என்று காத்திருக்காமல் தரமான மீன்கள் தான் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். …

The post வேலூர் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு பார்மலின் கெமிக்கல் கலந்த மீன்கள் விற்பனையா? appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...