×

பெண் தூக்கிட்டு தற்கொலை :கொலை என தாய் புகார்

திருப்போரூர் : சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொம்மியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மனைவி உஷாராணி. இவர்களது மகள் லாவண்யா (எ) ஜெகதீஸ்வரி (36). இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் சாதனவளசு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) என்பவருக்கும் கடந்த  2009ம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனைவரும் பெங்களூரூவில் வசித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு, வெங்கடேசனுக்கு சென்னை வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணி கிடைத்தது. அவர், குடும்பத்துடன் வண்டலூர் அடுத்த  மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியேறினார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வெங்கடேசன் வேலைக்கு சென்றார். இரவு வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது படுக்கையறை கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. அவர், பலமுறை மனைவியை அழைத்தும் பதில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த வெங்கடேசன், பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது, லாவண்யா மின் விசிறியில் தூக்குப் போட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவலறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், லாவண்யாவின் பெற்றோருக்கு, வெங்கடேசன் தகவல் கொடுத்தார். அதன்பேரில், லாவண்யாவின் தாய் மற்றும் உறவினர்கள் வந்தனர். அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, லாவண்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விட்டதாகவும் கூறினர்.இதுகுறித்து லாவண்யாவின் தாய் உஷாராணி கூறுகையில், கடந்த சில நாட்களாகவே கணவன், மனைவிக்குள் பிரச்னை இருந்தது. நீண்ட நாட்கள் தங்களது வீட்டில் இருந்த மகளை, வெங்கடேசன் கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு அழைத்து சென்றார். லாவண்யாவின் மாமனார், தவறாக நடக்க முயன்றதாக கூறி எனது மகள் அழுதாள். லாவண்யாவின் இறப்பு குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அதற்கு, போலீசார் பிரேத பரிசோதனையின் முடிவு வந்ததும் லாவண்யாவின் இறப்புக்கு காரணம் தெரியும். அதன் பிறகு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தொடர்ந்து சமாதானம் கூறினர். லாவண்யா தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post பெண் தூக்கிட்டு தற்கொலை :கொலை என தாய் புகார் appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Rajaratnam ,Pommiyampati village ,Salem district Omalur ,
× RELATED திருப்போரூர் – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை