×

கும்பகோணம் அருகே சாலை விரிவாக்கத்தின்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சாலை விரிவாக்கத்தின் போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் நரசிங்கன்பேட்டை பகுதியில் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி, அதன் வேரையும் முழுமையாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோயில் எதிர் பகுதியில் இருந்த பழமையான புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மரத்தின் பெரிய அளவிலான வேரினை நேற்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு அகற்றும் பணி நடந்தது. அப்போது சுமார் 6 அடி பள்ளம் வெட்டி வேரினை அப்புறப்படுத்தியபோது கருங்கல்லாலான சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த சிலைகளை வெளியே எடுத்தபோது சுமார் 3 அடி உயரம் கொண்ட அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் கருங்கல் சிலைகள் என்பது தெரியவந்தது. இச்செய்தி பரவியதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை நரசிங்கன்பேட்டை பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிலைகளை ஆர்வமுடன் பார்க்க குவிந்தனர். பின்னர் சிலைகளை சுத்தம் செய்து குங்குமம் மற்றும் மஞ்சள் வைத்து, பூக்கள் அணிவித்து வணங்கினர். இது குறித்து நரசிங்கம்பேட்டை பஞ்சாயத்து தலைவர் மாலதி சதீஷ்ராஜ் திருவிடைமருதூர் தாசில்தாருக்கு தகவல் அளித்ததன் பேரில், தகவலறிந்த நரசிங்கன்பேட்டை விஏஓ சொக்கேஸ்வரன் மற்றும் திருவிடைமருதூர் தாசில்தார் சந்தனவேல் ஆகியோர் சோதனை செய்தபின் சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது….

The post கும்பகோணம் அருகே சாலை விரிவாக்கத்தின்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Sami ,Kumbakonam ,Thanjana District Thiruvidimarudur Union ,Dinakaran ,
× RELATED ராணிப்பேட்டை அருகே உள்ள...