×
Saravana Stores

கூடுதல் விமானங்கள் வந்து செல்லும் வகையில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் ₹7.5 கோடியில் உள் கட்டமைப்பு வசதி: பணிகள் தொடங்கியது

சேலம்: சேலம் மாவட்டம்  ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் கடந்த 1993ம் ஆண்டு விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் விமானங்கள் இயக்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. பின்னர், அரசின் நடவடிக்கையால், உடான் திட்டத்தில் சேலம்- சென்னை இடையே விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தினமும் காலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் விமானம் இயக்கப்பட்டது. தற்போது, சேலம் – சென்னை இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. மேலும், தற்போது விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகிறது. சேலம் விமான நிலையத்தில் ஓடு பாதையை  சீரமைத்து, சமன்படுத்தும் பணிக்கு ஒன்றிய விமான போக்குவரத்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சேலம் விமான நிலையத்தில் ஓடுபாதையின் கீழ் மட்டப்பகுதியை தரம் பிரித்து, சீரமைக்கும் பணியை மேற்கொள்ள ₹60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.  இதனிடையே, சேலத்திற்கு விமானங்கள் வந்து நிற்கும் வகையிலும், ஒரே நேரத்தில் 2 விமானங்கள் தரையிரங்கும் வகையிலும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள ₹7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து சேலம் விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் ஓடுபாதை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, ஓடுபாதையுடன், விமானம் நிறுத்துவதற்கான ஏப்ரான் கட்டுமான பணியும், ஓடுபாதையை நீட்டிக்கும் பணியையும் தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து, உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையில் ₹7.5 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு, ஒரே நேரத்தில் 4 சிறிய விமானங்களும், 2 பெரிய விமானங்களும், நிறுத்தி வைக்கவும், வந்து செல்லவும் முடியும். இரவு நேரங்களில் விமானம் வந்தும் செல்லும் வகையில் மின்னொளி வசதிகளும்  மேற்கொள்ளப்படவுள்ளது,’’ என்றனர்….

The post கூடுதல் விமானங்கள் வந்து செல்லும் வகையில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் ₹7.5 கோடியில் உள் கட்டமைப்பு வசதி: பணிகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Salem Kamalapuram airport ,Salem ,Kamalapuram ,Omalur ,Salem district ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்தது!