தெலங்கானாவில் ஒரு கிராமத்தில் நடக்கும் நண்பர் ஒருவரின் திருமண விழாவுக்கு அமல் டேவிஸ், சச்சின் செல்கின்றனர். அங்கு ரீனுவை (மமிதா பைஜூ) சந்திக்கும் சச்சின், கண்டதும் காதல் கொள்கிறார். ரீனுவின் டீம் லீடர் ஆதி (ஷ்யாம் மோகன்), அவர்களின் நட்புக்கு குறுக்கே நிற்கிறார். எனினும், ரீனுவின் காதலைப் பெற முயற்சிக்கும் சச்சின் ஐதராபாத்திலேயே தங்குகிறார். இதை ரீனுவின் தோழி கார்த்திகாவிடம் சொல்ல, ரீனுவின் வருங்கால கணவருக்கான தகுதிகள் எதுவும் சச்சினிடம் இல்லை என்று கார்த்திகா சொல்கிறார். இதனால் அப்செட்டாகும் சச்சின், நேரடியாக ரீனுவிடமே காதலை சொல்ல, எனக்கு உன் மீது காதல் வரவில்லை என்று ரீனு சொல்கிறார். இதனால் மனம் வெறுத்த சச்சின் லண்டன் செல்ல ஆயத்தமாகிறார். அப்போது ரீனுவிடம் ஆதி, ‘நீ என்னை காதலிப்பதாக சொல்’ என்று வற்புறுத்துகிறார். இதையறிந்த சச்சின் என்ன செய்கிறார் என்பது மீதி கதை.
100 கோடிக்கு மேல் வசூலித்து ‘பிரேமலு’ செய்திருக்கும் மாயாஜாலத்தை, தியேட்டரில் மட்டுமே ரசித்து அனுபவிக்க முடியும். காதல் சாம்ராஜ்ஜியத்தின் மிகச்சிறந்த ஜோடி நஸ்லென் கபூர், மமிதா பைஜூ என்று சொல்லலாம். அவர்களின் நட்பும், காதலும், பிரிவும் அபாரம். சுனேனா, பூனம் பஜ்வா, நஸ்ரியாவின் கலவை போல் இருந்தாலும், மமிதா பைஜூவின் இயல்பான நடிப்பு, கதையின் ஜீவனாக இருக்கிறது. கிளைமாக்சில் நஸ்லென் கபூரை பிரிந்து செல்லும் காட்சியில் மனதை உருக்குகிறார். டைமிங் காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார், அமல் டேவிஸாக வரும் சங்கீத் பிரதாப். வில்லனோ என்று யோசிக்க வைத்து, கடைசியில் காமெடி பீஸ் ஆகும் ஷ்யாம் மோகன் நல்ல தேர்வு.
அகிலா பார்கவன், மீனாட்சி, மேத்யூ தாமஸ் உள்பட அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். மெல்லிய காதல் உணர்வுகளை துல்லியமாக காட்டிய அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு அசத்தல். 100 சதவீத ஃபீல்குட் லவ் மூவிக்கான எபெக்ட்டை விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை கொடுத்துள்ளது. பாடல்களும் பொருத்தமாக இருக்கின்றன. இளம் தலைமுறையினரின் காதலை உள்ளங்கை நெல்லிக்கனி போல் திரையில் காட்டியிருக்கும் கிரிஷ் ஏ.டி, ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டிய இயக்குனர்களில் ஒருவர்.
The post பிரேமலு விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.