×

பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலூர்: தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாறு அணை நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டுதோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.இந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 130 அடிக்கு குறையாமல் இருந்ததால், முதல் போக விவசாயத்திற்கு ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள், முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று முல்லை பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.இதையடுத்து இன்று முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.35 அடியாக இருந்த நிலையில், தேக்கடியில் தமிழக பொதுப்பணி துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி ஷட்டரை இயக்கி, வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டார். தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்பி பிரவின் உமேஷ் டோங்கரே மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தமிழக விவசாயிகள் ஆகியோர் தமிழக பகுதிக்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், ‘பெரியாறு அணையில் இருந்து, தேனி மாவட்ட முதல் போக விவசாயத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து, வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் விவசாயத்திற்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்றார்….

The post பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Goriyaru dam ,Cuddalore ,Theni district ,Kampam Valley Uthamapalayam ,Bodi circle ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை