- கிறிஸ்டோபர் நோலன்
- லாஸ் ஏஞ்சல்ஸ்
- 96 வது
- ஆஸ்கார்
- டால்பி தியேட்டர்
- ஜிம்மி கிம்மல்
- ஓப்பன்ஹீமர்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
லாஸ் ஏஞ்சல்ஸ்: 96வது ஆஸ்கர் விருது விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் நான்காவது முறையாக ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கினார். இதில் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஏழு விருதுகளையும், ‘புவர் திங்ஸ்’ படம் நான்கு விருதுகளையும் வென்றுள்ளது. அணுகுண்டின் தந்தை ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்) மற்றும் சிறந்த நடிகருக்கான விருதை கிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்) ஆகியோர் பெற்றனர். ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதினை கிறிஸ்டோபர் நோலன் வென்றார்.
ஆஸ்கர் விருதுகள் விவரம்:
சிறந்த திரைப்படம்: ஓப்பன்ஹெய்மர். சிறந்த இயக்குனர்: கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்). சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்). சிறந்த நடிகர்: கிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்). சிறந்த திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால் – ஜஸ்டின் ட்ரைட், அர்தர் ஹராரி. சிறந்த ஒளிப்பதிவு: ஓப்பன்ஹெய்மர் – ஹொய்த் வென் ஹொய்த்தெமா. சிறந்த படத்தொகுப்பு: ஓப்பன்ஹெய்மர் – ஜெனிபர் லேம். சிறந்த துணை நடிகை: தி ஹோல்டோவர்ஸ் – டெவைன் ஜாய் ராண்டல்ஃப். சிறந்த துணை நடிகர்: ஓப்பன்ஹெய்மர் – ராபர்ட் டவ்னி ஜூனியர். சிறந்த பாடல்: ‘வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ (பார்பி) – இசை, பாடல் – பில்லி எலிஷ், ஃபின்னீஸ் ஓ கான்னல்.
சிறந்த பின்னணி இசை: ஓப்பன்ஹெய்மர் – லுட்விக் கொரன்சன். சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல் (உக்ரைன்). சிறந்த ஆவணக் குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேயர் ஷாப். சிறந்த சர்வதேச திரைப்படம்: தி ஜோன் ஆஃப் இன்ட்ரெஸ்ட் (இங்கிலாந்து). சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரன்.
அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர். தயாரிப்பு நிர்வாகம்: புவர் திங்ஸ். சவுண்ட் எஃபெக்ட்: தி ஜோன் ஆப் இன்டெரஸ்ட் – டெர்ன் வில்லர்ஸ், ஜான்னி பர்ன்.
விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஸில்லா மைன் ஒன். தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்ஷன் – கார்ட் ஜெஃபர்ஸன். ஆக்ஷன் குறும்படம்: தி வொண்டர்ஃபுல் ஸ்டோரி ஆப் ஹென்றி சுகர். ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: புவர் திங்ஸ் – நடியா ஸ்டேகி, மார்க் கௌலியர், ஜோஷ் வெஸ்டன். ஆடை வடிவமைப்பாளர்: ஹோலி வட்டிங்டன் (புவர் திங்ஸ்).
* ஆர்ஆர்ஆர் படத்துக்கு மீண்டும் கவுரவம்
கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு கிடைத்தது. இந்நிலையில் இம்முறை விழாவில் ஸ்டன்ட் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக பல்வேறு படங்களில் இடம்பெற்ற சிறந்த ஆக்ஷன் காட்சிகளின் கிளிப்பிங்ஸ் ஒளிபரப்பினார்கள். அதில் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே படம் ‘ஆர்ஆர்ஆர்’. ‘மீண்டும் ஒருமுறை கவுரவிக்கப்பட்டது. எங்களுக்கு பெருமையாக உள்ளது’ என ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு தெரிவித்தது.
* வெளியேறிய இந்திய ஆவணப் படம்
கடந்த ஆண்டு சிறந்த ஆவண குறும்படமாக இந்தியா சார்பில் போட்டியிட்ட ‘தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கரை வென்றது. முதுமலையை சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியின் யானை வளர்ப்பை பற்றிய படமாக இது இருந்தது. அதேபோல், இந்த ஆண்டு சிறந்த ஆவணப் படத்துக்கான போட்டி பிரிவில் இந்தியாவின் ‘டு கில் எ டைகர்’ ஆவணப் படமும் இடம்பெற்றிருந்தது. கனடாவில் வாழும் இந்தியரான நிஷா பஹுஜா இந்த ஆவணப் படத்தை இயக்கியிருந்தார். இவரது குடும்பத்தார் டெல்லியை சேர்ந்தவர்கள். ‘டு கில் எ டைகர்’ ஆவணப் படத்தை தயாரித்தவர்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். ஜார்க்கண்டில் விவசாயி ரஞ்சித்தின் 13 வயது மகள், ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்படுகிறார். இதையடுத்து ரஞ்சித் மேற்கொள்ளும் சட்டப் போராட்டங்களை வலியுடன் சொல்கிறது இந்த படம். இதற்கு கண்டிப்பாக ஆஸ்கர் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் உக்ரைனை சேர்ந்த மிஸ்டை ஸ்லாவ் கெர்நோவ் இயக்கிய ‘20 ேடஸ் இன் மரியுபோல்’ ஆவணப் படத்துக்கு விருது கிடைத்தது. ரஷ்ய போர் படையிடம் சிக்கும் உக்ரைனை சேர்ந்த மீடியாவினரின் நிலையை இந்த ஆவணப் படம் சொல்கிறது. ‘டு கில் எ டைகர்’ ஆவணப் படத்தை நெட்பிளிக்சில் காணலாம்.
* நோலனின் முதல் விருது
தனது படங்களுக்காக உலக அளவில் பிரபலமான இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இதுவரை ஆஸ்கர் வென்றதில்லை. சிறந்த இயக்குனருக்காக அவரது பெயர் இதற்கு முன் 2017ம் ஆண்டு வெளியான ‘டன்கிர்க்’ என்ற போர் தொடர்பான படத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவரால் அந்த விருதை அப்போது வெல்ல முடியவில்லை. பின்னர் சிறந்த திரைக்கதைக்காக ‘இன்ஸெப்ஷன்’ (2010), ‘மெமன்டோ’ (2001) ஆகிய படங்களுக்காக அவர் பெயர் விருது பட்டியலில் இடம்பெற்றது. அப்போதும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இப்போதுதான் முதன்முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை அவர் தட்டிச் சென்றுள்ளார்.
* நிதின் தேசாய்க்கு அஞ்சலி
கடந்த ஓராண்டில் மறைந்த உலக திரைக்கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆஸ்கர் விழாவில் வழக்கம். அதுபோல் கடந்த ஆண்டு மறைந்த பலருக்கு அஞ்சலி செலுத்தும் காணொளி வெளியிடப்பட்டது. இதில் பாலிவுட் ஆர்ட் டைரக்டர் நிதின் தேசாயின் படமும் இடம்பெற்றது. 20 ஆண்டுகள் பாலிவுட்டில் கோலோச்சியவர் இவர். அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஷாருக்கான், ஆமிர்கான் உள்பட பலரது படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர்.
* மேடைக்கு நிர்வாணமாக வந்த நடிகர்
நடிகரும் மல்யுத்த வீரருமான ஜான் சினா, சிறந்த காஸ்டியூமருக்கான விருதை கொடுக்க நிர்வாண கோலத்தில் மேடைக்கு வந்தார். இதை பார்த்து அதிர்ந்த பார்வையாளர்கள், முகம் சுழித்தனர். இதையடுத்து விழா அரங்கில் விளக்குகள் அணைக்கப்பட்டன. சிலர் ஆடைகளுடன் வந்து ஜான் சினாவுக்கு உடையை அணிவித்தனர். அதன் பிறகே விளக்குகள் போடப்பட்டது. இது காமெடிக்காக தான் செய்தது என ஜான் சினா விளக்கம் தந்துள்ளார். ஆனாலும் அவரது செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
* பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷமிட்ட நடிகர்
‘ஹல்க்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மார்க் ரஃபல்லோ. இவர் நேற்று விழாவில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினார். இதனால் அரங்கத்தில் பரபரப்பு நிலவியது.
The post 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது ஓப்பன்ஹெய்மர்: முதன் முறையாக விருது பெற்றார் கிறிஸ்டோபர் நோலன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.