×

கட்டண டிக்கெட் கவுன்டர் வழியாக செல்ல திருத்தணி முருகன் கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி மறுப்பு: போலீசார் குவிப்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கட்டண டிக்கெட் கவுன்டர் வழியாக உள்ளூர் பக்தர்கள் செல்வதற்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி  முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், கோயில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்துகின்றனர். மேலும் முடிகாணிக்கை செலுத்தியும் பல்வேறு காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருத்தணி  முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு கட்டணம் டிக்கெட், இலவச தரிசன பாதை உள்ளது.  இதுதவிர விஐபி தரிசன டிக்கெட் கவுன்டரும் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக திருத்தணி பகுதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள், கட்டண டிக்கெட் வழியாக சென்று இலவசமாக தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், சில நாட்களுக்கு  முன் கட்டண கவுன்டர் வழியாக செல்ல உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோயில் நிர்வாகத்தை கண்டித்தும் உள்ளூர் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்த்துவைத்தனர். இந்த நிலையில், கட்டண கவுன்டர் வழியாக உள்ளூர் பக்தர்கள் செல்ல முடியாது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டு, நோட்டீஸ் வைத்துள்ளனர். அதில், ‘’கட்டண சீட்டு கவுன்டர் வழியாக இலவசமாக அனுமதிக்கப்பட மாட்டாது.  அவ்வாறு அனுமதிக்கக்கோரி  திருக்கோயில் பணியாளர்களுடன் வாக்குவாதத்திலோ வன்முறையிலோ ஈடுபடுகின்றவர்கள் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உள்ளூர் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக மலைக்கோயில் வளாகத்தில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்….

The post கட்டண டிக்கெட் கவுன்டர் வழியாக செல்ல திருத்தணி முருகன் கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி மறுப்பு: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruthani Murugan Temple ,Thiruthani ,Thiritani ,Murugan Temple ,Murugan ,Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள்...