×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மெட்வடேவை வீழ்த்தினார் சிலிக்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்றில், டேனில் மெட்வடேவை எளிதாக நேர் செட்களில் வீழ்த்தி, மரின் சிலிக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த இப்போட்டியில் ஏடிபி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும், தரவரிசையில் 20வது இடத்தில் உள்ள குரோஷியாவின் இளம் வீரர் மரின் சிலிக்கும் மோதினர். இதில் முதல் செட்டை 6-2 என அதிரடியாக கைப்பற்றிய சிலிக், அடுத்த 2 செட்களையும் அதே வேகத்தில் 6-3, 6-2 என வசப்படுத்தி, நேர் செட்களில் மெட்வடேவை வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம் மரின் சிலிக், நடப்பு பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் அவர், ரஷ்யாவின் மற்றொரு வீரரான ஆண்ட்ரே ரப்லேவுடன் மோதவுள்ளார். முன்னதாக ரப்லேவ், 4ம் சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார். இதில் முதல் செட்டை சின்னர் 6-1 என எளிதாக வசப்படுத்தினார். 2ம் செட்டை ரப்லேவ், 6-4 என கைப்பற்றினார். 3வது செட்டில் 2-0 என ரப்லேவ் முன்னிலையில் இருந்த போது, காயம் காரணமாக விலகிக் கொள்வதாக சின்னர்  தெரிவித்தார். இதையடுத்து ரப்லேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.காலிறுதியில் ஜோகோவிச்-நடால் மோதல்இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கும் நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றையர் பிரிவு முதலாவது காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவும், ஸ்பெயினின் வளர்ந்து வரும் நட்சத்திரம் கார்லோஸ் அல்காரசும் மோதுகின்றனர். 2வது காலிறுதிப் போட்டி இன்று இரவு 12.15 மணியளவில் நடைபெறவுள்ளது. அதில் முன்னணி வீரரும் 13 முறை பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால், நடப்பு பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் மோதுகிறார்.கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 21 பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ளார். ஜோகோவிச் 20 பட்டங்களை வென்று, அடுத்த இடத்தில் உள்ளார். நடப்பு பிரெஞ்ச் ஓபனில் இதுவரை ஜோகோவிச் அனைத்து போட்டிகளிலும் நேர் செட்களில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆனால் நடால், 4ம் சுற்றுப் போட்டியில் கனடாவின் இளம் வீரர் ஆகர் அலியாசைமை, 5 செட்களில் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், 11ம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா ஆகியோர் 4ம் சுற்றில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்….

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மெட்வடேவை வீழ்த்தினார் சிலிக் appeared first on Dinakaran.

Tags : French Open Tennis ,Medvade ,Cilic ,Paris ,French Open Grandslam ,Danil Medvade ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்:...