×

மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவிக்கான சீட் கொடுக்காததால் 2 ஒன்றிய அமைச்சர்களின் பதவிக்கு சிக்கல்?.. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முடிவால் விரைவில் அமைச்சரவை மாற்றம்..!

டெல்லி: பாஜகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் ஒன்றிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயர் இல்லை. அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்பியும், ஒன்றிய அமைச்சருமான ஆர்பி சிங்கிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்களது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் வரும் ஜூன் 10ம் தேதி 57 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 11 காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்தது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒன்றிய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வு செய்யப்பட உள்ளார். இதேபோல், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார். 11 இடங்கள் காலியாக உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்காக கோரக்பூர் தொகுதியை விட்டுக் கொடுத்த ராதா மோகன் அகர்வாலுக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட  ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயர் இல்லை. இந்த நிலையில், நேற்றிரவு 4 பாஜக வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலும் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயர் இடம்பெறவில்லை. அதனால், இவரது அமைச்சர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்பி மித்லேஷ் குமார், ஆந்திராவை சேர்ந்த ஓபிசி பிரிவு தலைவர் லட்சுமணன், கர்நாடகாவில் லெஹர் சிங் சிரோயா (எடியூரப்பாவின் ெநருங்கிய ஆதரவாளர்), மத்திய பிரதேசத்தில்  சுமித்ரா வால்மீகி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதுவே பாஜகவின் கடைசி பட்டியல் என்பதால், மூத்த தலைவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டதாகவும், அதனால் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்டியலில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மூத்தத் தலைவர்கள் ஓ.பி.மாத்தூர், வினய் சஹஸ்த்ரபுத்தே, பாஜக பொதுச் செயலாளர் துஷ்யந்த் கவுதம், மாநிலங்களவை தலைமைக் கொறடாவும், முன்னாள் அமைச்சருமான சிவபிரதாப் சுக்லா உள்ளிட்டோர் அடங்குவர்.பாஜகவில்தான் இப்படி என்றால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய எஃகு துறை அமைச்சருமான ஆர்.சி.பி.சிங்கின் மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் வரும் ஜூலையுடன் முடிவடைகிறது. ஆனால் அவரை மீண்டும் மாநிலங்களவை வேட்பாளராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவிக்கவில்ைல. அதனால், அவரது அமைச்சர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது எம்பி பதவிகாலம் வரும் ஜூலை 6ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் எனது பெயரை கட்சி அறிவிக்கவில்லை. 16 எம்பிக்களை வைத்துக் கொண்டு நீங்கள் (நிதிஷ் குமார்) பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என்று கனவு காண வேண்டாம். விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன். நான் அமைச்சர் பதவியில் தொடர்வேனா என்பதை பிரதமர் மோடி முடிவு செய்வார்’ என்றார். அமைச்சர் ஆர்சிபி சிங்கின் எம்பி பதவிக்கான வாய்ப்பை ஐக்கிய ஜனதா தளம் பறித்ததால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரே அமைச்சராக இருக்கும் ஆர்சிபி சிங், விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே ஒன்றிய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி.சிங் ஆகியோருக்கு மீண்டும் எம்பி சீட் கொடுக்கப்படாததால், அவர்கள் தங்களது பதவியை வரும் ஜூலைக்குள் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது….

The post மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவிக்கான சீட் கொடுக்காததால் 2 ஒன்றிய அமைச்சர்களின் பதவிக்கு சிக்கல்?.. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முடிவால் விரைவில் அமைச்சரவை மாற்றம்..! appeared first on Dinakaran.

Tags : Ministers ,Rajasaba ,BJP ,United Janata ,Delhi ,Union Minister ,Mukhtar Abbas Naqvi ,Bajaka ,United States ,BAJAKA, ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...