கதையின் நாயகன் மார்ட்டின் (எஸ்.பி.சித்தார்த்), மிகப்பெரிய எஸ்டேட்டில் மேனேஜராக பணியாற்றுகிறார். தனது மனைவி லீனாவை (சைதன்யா பிரதாப்) இம்ப்ரஸ் செய்ய, விதவிதமான ஐடியாக்களை மேற்கொள்கிறார். மனைவியின் செல்போன் கேமரா வழியாக அவரது நடத்தைகளை கவனிக்கும் ஆப் மூலம் அனைத்தையும் கவனித்து, அதை ஒரு வீடியோவாக்கி இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கிறார். சாதாரண இந்த விளையாட்டு விபரீதமாகிறது.
தான் இல்லாத நேரத்தில் ஒரு ஆண் தன் வீட்டுக்கு வருவதையும், மனைவி அவனுடன் இணைந்து தன்னை கொலை செய்ய திட்டமிடுவதையும் தெரிந்துகொள்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. ‘அதோமுகம்’ என்றால், மனிதர்களின் இன்னொரு முகம் என்று பொருள். மனைவியின் இன்னொரு முகத்தைக் கண்டுபிடிக்கும் மார்ட்டின், தனது இன்னொரு முகத்தையும் அறிகிறார். அது என்ன முகம் என்பது சஸ்பென்ஸ். மலையாள பாணியில் அடுத்தடுத்த திருப்பங்களைக் கொடுத்து, விறுவிறுப்பான திரில்லர் படத்தை வழங்கியுள்ளார், இயக்குனர் சுனில் தேவ்.
கடைசி 15 நிமிடங்களில் முழு கதையையும் திருப்பிப் போடும் திரைக்கதை படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறது என்றாலும், அருண் பாண்டியனின் அறிமுகம் மூலம் அடுத்த பாகத்துக்கு லீட் கொடுத்திருப்பது செயற்கைத்தனமாக இருக்கிறது. மார்ட்டினாக நடித்துள்ள எஸ்.பி.சித்தார்த், தனது கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். மனைவியின் இன்னொரு முகத்தைக் கண்டு அதிர்ச்சி அடைவதை, தன் முகத்தில் நேர்த்தியாகக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரீதியில் அப்பாவி பெண்ணாக வந்து, கடைசியில் ‘அடப் பாவி’ என்று சொல்லும் மகளாக மாறி அசர வைத்துள்ளார், சைதன்யா பிரதாப். பெரும்பகுதி கதை இவர்களைச் சுற்றியே நகர்வதால், மற்ற கேரக்டர்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. அருண் விஜயகுமாரின் ஒளிப்பதிவு, எஸ்டேட்டின் குளுமையை இதமாக உணர வைக்கிறது. மணிகண்டன் முரளியின் பின்னணி இசை, கதையுடன் இணைந்து நேர்த்தியாகப் பயணித்துள்ளது.
The post ‘அதோமுகம்’ விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.