×

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் குடிசை வீடு கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்-31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

கலசபாக்கம் : கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு, குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டது. பின்னர், 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும். கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தர உத்தரவிட்டார். தொடர்ந்து, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக, 2010க்கு பிறகு உள்ள குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்பணிகளை வரும் 31ம் தேதிக்குள்ள முடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், குடிசை வீடுகளை கணக்கெடுத்து, அதன் விவரங்கள் குறித்து படம் எடுத்து, இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.எனவே, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு விரைவில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது. இதனால் குடிசைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் குடிசை வீடு கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்-31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalasabakkam ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...