×

ஹர்ஷல் படேல் தான் எங்கள் அணியின் ஜோக்கர் படிதார் சதம், ஐபிஎல்லில் நான் பார்த்த பெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்று: ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ் பேட்டி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன் குவித்தது. ரஜத் படிதார் ஆட்டம் இழக்காமல் 54 பந்தில், 12 பவுண்டரி, 7 சிக்சருடன் 112 ரன் விளாசினார். தினேஷ்கார்த்திக் தனது பங்கிற்கு 23 பந்தில், 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 37 ரன் எடுத்து களத்தில் இருந்தார். விராட் கோஹ்லி 25, மேக்ஸ்வெல் 9, மஹிபால் லோமரோர் 19, டூபிளசிஸ் 0 என ஆட்டம் இழந்தனர்.பின்னர் களம் இறங்கிய லக்னோ 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களே எடுத்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் 79 (58 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), தீபக் ஹூடா 45 (26 பந்து, 4 சிக்சர், ஒரு பவுண்டரி) ரன் எடுத்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ஹேசில்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார். ரஜத் படிதார் ஆட்டநாயகன், அதிக ஸ்டிரைக் ரேட், அதிக பவுண்டரி, சிக்சர், கேம் சேஞ்சர் என 6 விருதுகளை அள்ளினார்.வெற்றிக்கு பின் பெங்களூரு கேப்டன் டூபிளசிஸ் கூறியதாவது: “இந்த நாள் சிறப்பான நாள். அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஜத் படிதார் அடித்த சதம், ஐபிஎலில் நான் பார்த்த பெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்று. பல சிறப்பான ஷாட்களை ஆடினார். தொடர்ந்து எதிரணிக்கு அழுத்தங்களை கொடுத்துக்கொண்டே இருந்தார். எங்கள் பந்துவீச்சாளர்கள் தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தனர், அது நன்றாக இருந்தது. ஹர்ஷல் படேல்தான் எங்கள் அணியின் ஜோக்கர். ஜோக்கர் இருந்தால், சீட்டு விளையாட்டில் ஜெயிப்பது சுலபம். ஹர்ஷல் முக்கியமான ஓவர்களை சிறப்பாக வீசினார். 19வது ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல், ஆட்டத்தை ஆர்சிபி பக்கம் கொண்டு வந்தார்” எனக் கூறினார். ஆட்டநாயகன் ரஜத் படிதார் கூறுகையில், பந்தை பவர் செய்வதற்கு பதிலாக, நான் பந்தை டைமிங் செய்து வருகிறேன். பவர்பிளேவின் கடைசி ஓவரில், குருனல் பாண்டியாவை எதிர்கொண்டபோது, ​எனது திட்டங்களைச் செயல்படுத்திய விதத்தில், இன்று என்னால் பெரிய ஸ்கோர் செய்ய முடியும் என்று உணர்ந்தேன். எனது கவனம் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் இருந்தது. பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் நல்ல ஷாட்களை ஆடினேன், என்றார். அகமதாபாத்தில் நாளை நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தானுடன் ஆர்சிபி மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி பைனலில் வரும் 29ம் தேதி குஜராத்துடன் மோதும்….

The post ஹர்ஷல் படேல் தான் எங்கள் அணியின் ஜோக்கர் படிதார் சதம், ஐபிஎல்லில் நான் பார்த்த பெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்று: ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Harshal Patel ,Jokar Padidar Sadam ,IPL ,RCB ,Duplassis ,Kolkata ,Lucknow Super Giants ,RoyalChallengers ,Eden Garden Ground, Kolkata ,Joker Padidar Sadam ,Duplessis ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...