மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமே தன் லட்சியம் என்று பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஜெயம் ரவி, தனது மனைவி மாற்றுத்திறனாளியான நர்ஸ் அனுபமா பரமேஸ்வரன், மகள் யுவினா பார்த்தவி என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சாதிவெறி பிடித்த டிஎஸ்பி சமுத்திரக்கனியின் தங்கையை வேறு சாதி இளைஞன் காதலிப்பதை அறிந்து, சாதிக்கட்சியைச் சேர்ந்த அழகம்பெருமாள், அஜய் ஆகியோர் அந்த இளைஞனை தீர்த்துக்கட்ட வரும்போது தடுக்கும் ஜெயம் ரவி, ‘இன்னுமா சாதிவெறி பிடிச்சி அலையறீங்க. உடனே மாறுங்கடா’ என்று அட்வைஸ் செய்கிறார். இதனால் அவர் மீது கோபப்படும் சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், அஜய் கோஷ்டி, அனுபமா பரமேஸ்வரனை ஒரு விபத்தில் சிக்க வைத்து, பிறகு அப்பழியை ஜெயம் ரவி மீது சுமத்துகின்றனர்.
இதையடுத்து, தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக காலம் கழிக்கும் ஜெயம் ரவி, 14 ஆண்டுகள் கழித்து, 14 நாட்கள் பரோல் கிடைத்து சொந்த வீட்டுக்கு வருகிறார். ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அவரை வரவேற்க, வயதுக்கு வந்த மகள் மட்டும், ‘அந்த கொலைகாரன் எனக்கு அப்பாவே கிடையாது. அந்த ஆளை நான் பார்க்க மாட்டேன்’ என்று சொல்லி, தன் வீட்டில் இருந்து வெளியேறி சொந்தக்காரர் வீட்டில் தங்குகிறார். இதையறிந்து மனம் கலங்கும் ஜெயம் ரவி, பரோல் முடிவடையும் கடைசி ராத்திரிக்குள், தான் 14 ஆண்டுகள் சிறையில் இருக்க காரணமானவர்களைப் பழிவாங்க முயற்சி செய்கிறார். அது நடந்ததா, இல்லையா என்பது மீதி கதை.
ஜெயம் ரவிக்கு ‘டெய்லர்மேட்’ கேரக்டர். அதை உணர்ந்து நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் தனி கவனம் செலுத்தியுள்ளார். மகளின் பாசத்துக்கு ஏங்கும் அவர், எதிரிகளைப் பழிவாங்கும் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். மகள் கேரக்டரில் யுவினா பார்த்தவி சிறப்பாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டியிருக்கும் கீர்த்தி சுரேஷ், தன்மீது கொலைப்பழி சுமத்தும் டிஎஸ்பியைக் கண்டு கொதிக்கும்போது, சரியான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். ஜெயம் ரவி மீது கொலைக்குற்றம் சாட்டி கைது செய்யத் துடிக்கும் அவரது வேகம் பரபரப்பு ஏற்படுத்துகிறது. சாதிவெறி டிஎஸ்பி சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், அஜய் மற்றும் அனுபமா பரமேஸ்வரன், ‘அருவி’ மதன்குமார், சாந்தினி தமிழரசன், சபீதா ராய் ஆகியோர், கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்துள்ளனர். ஜெயம் ரவியைக் கண்காணிக்கும் போலீஸ் யோகி பாபு, டைமிங் காமெடியால் சிரிக்க வைக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்துள்ளன. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவு, சிறைச்சாலை மற்றும் திருவிழா காட்சிகளில் யதார்த்தமாகப் பயணித்துள்ளது. ஆம்புலன்ஸ் சேசிங் காட்சி பரபரப்பு ஏற்படுத்துகிறது. புது இயக்குனர் அந்தோணி பாக்யராஜ், ஜெயம் ரவியை முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக்க முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும். சைரன் ஆக்ஷன் பிரியர்களுக்கு பிடிக்கும்.
The post சைரன் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.