×

மாநிலத்தின் நீர்வளஆதாரங்களை கண்டறிய தமிழகத்தில் 1,000 தானியங்கி மழைமானிகள்: ரூ.25 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு

சென்னை: நீர்வள ஆதாரங்களை கண்டறியும் வகையில் ரூ.25 கோடியில், மாநிலம் முழுவதும் உள்ள பிர்காக்களில் 1,000 தானியங்கி மழை மானிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 34 ஆறுகள், 17 ஆற்று வடிநிலங்கள், 127 உப விளைநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் சராசரி மழை 960 மி.மீ ஆகும். இதில், தென்மேற்கு பருவமழை மூலம் சராசரி 439 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலம் சராசரி 440 மி.மீட்டர் மழை கிடக்கிறது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த நீர் மேற்பரப்பு நீர்வள ஆதாரம் 711 டிஎம்சி. பூமியின் மேற்பரப்பு நீர்வளத்தினை சேகரித்து, சேமித்து வைக்க தடுப்பணைகள், படுகை அணைகள், நிலத்தடி தடுப்புசுவர்கள், நீர் செறிவூட்டும் துளைகள் மற்றும் கசிவு நீர்க்குட்டைகள் போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, நீர்வள ஆதாரங்களின் பரப்பு, தரம் மேம்படுத்த வேண்டும் என்பதால், வெள்ளம் மற்றும் வடிநிலங்களின் நீர் ஆதாரங்களை மதிப்பிடும் வேளையை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.இதற்காக, மேற்பரப்பு நீரின் தரவு சேகரிக்கும் அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்படடுள்ளது. அதன்படி, மேற்பரப்பு நீர் பற்றிய நிகழ்வு நேர தரவுகளை சேகரிக்க, 1,000 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படுகிறது. தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பில் இந்த மழை மானிகள், மாநிலம் முழுவதும் 1,166 பிர்காக்களில் 1,000 பிர்காக்களில் ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நீர்வளநிலவள ஆதார விவர குறிப்பு மைய தலைமை பொறியாளர் பிரபாகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநில பேரிடர் அபாய குறைப்பு முகமை நிதியை கொண்டு ரூ.25 கோடி மதிப்பில் 1,000 தானியங்கி மழைமானிகள் வைக்கப்படுகிறது. இந்த மழைமானிகள் மாநிலம் முழுவதும் பிர்கா அளவில் அமைக்கப்படுகிறது. இந்த மழைமாணி வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட நிறுவன தயாரிப்புகளை மட்டுமே பெற வேண்டும். தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை டெண்டர் வெளிப்படை தன்மை சட்டம் 2000ன் கீழ் உள்ள நடைமுறைகளை பின்பற்றி தானியங்கி மழை மானிகளை கொள்முதல் செய்தல், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
———————————————–சுரேஷ் காளிபாண்டி

The post மாநிலத்தின் நீர்வளஆதாரங்களை கண்டறிய தமிழகத்தில் 1,000 தானியங்கி மழைமானிகள்: ரூ.25 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Govt ,Chennai ,Birkas ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...