×

செம்பரம்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் நாட்டில் உள்ள இதர நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும்: ஒன்றிய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு

சென்னை: செம்பரபாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள், நாட்டில் உள்ள இதர நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும் என ஒன்றியசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற  அமைச்சர் புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோருடன் இணைந்து, சிறப்பு நினைவு அஞ்சல் உறை ஒன்றையும் ‘இந்தியா நேச்சுரல்’ என்ற தலைப்பிலான புத்தகத்தையும் வெளியிட்டு, இந்தியா பல்லுயிர் விருதுகள் 2021-ஐ  அமைச்சர் புபேந்தர் யாதவ் வழங்கினார்.பின்னர் ஒன்றிய அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறியதாவது: இயற்கை வளங்களின் பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலகின் இயற்கையான வாழும் உள்கட்டமைப்புகளையும், சர்வதேச பொருளாதாரத்தின் இயக்கத்திற்கு அத்தியாவசியமான பொருட்களையும், சேவைகளையும் பல்லுயிர் அளிக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் சுமார் 40% பல்லுயிர் சார்ந்த பொருட்கள் மற்றும் செயல்முறைகளை அடிப்படையாக கொண்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் என்ற சவாலை நாம் எதிர் கொண்டால் மட்டுமே பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சி முழு வெற்றி அடையும். உலக வெப்பமயமாதலை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தேசிய அளவில் பல்லுயிர் இலக்குகளை அடையும் பாதையில் நாடு முன்னேறுவதுடன், சர்வதேச பல்லுயிர் இலக்குகளை அடைவதை நோக்கிய முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா வழங்கி வருகிறது.அரசு மற்றும் பொது சமூக நிறுவனங்களின் முயற்சிகளால் செம்பரபாக்கம் ஏரியில் அறிவியல் அடிப்படையிலான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சுற்றுச்சூழல் புனரமைப்புப் பணிகள் நாட்டில் உள்ள இதர நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும். பாம்பின் விஷத்தை பல்லுயிர் தனியார் நிறுவனம் அணுகும் வகையில், தேசிய பல்லுயிர் ஆணையமும், தமிழ்நாடு பல்லுயிர் வாரியமும், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, வருடம்தோறும் பாம்பு விஷத்திலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் 5% இருளர் மக்களின் நலனுக்காக இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தப்படும். பல்லுயிர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தகைய கூட்டுமுயற்சிகள் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்….

The post செம்பரம்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் நாட்டில் உள்ள இதர நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும்: ஒன்றிய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam ,Union Minister ,Bhupender Yadav ,Chennai ,Union Environment ,Sembarappakkam Lake ,
× RELATED சென்னைக்கு குடிநீர் ஏரிகளின் நிலவரம்..!!