×

வசிஷ்ட நதிக்கரையில் அருள்பாலித்து: சர்ப்பதோஷம் போக்கும் சாம்பமூர்த்தீஸ்வரர் கோயில்

சேலம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்ட நதிக்கரையோரம் இருக்கிறது சாம்பமூர்த்தீஸ்வரர் கோயில். இந்த கோயில் பஞ்சபூத லிங்கங்களில் அப்புலிங்கம் (நீர்) வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. பஞ்சபூதங்களும், நான்கு மறைகளும் வழிபட்ட பெருமைக்குரியது இந்தக் கோயில். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, முருகன் சன்னதிகள் உள்ளது. இதையடுத்து அஷ்டதிக்கு பாலகர்கள், பைரவர், அறுபத்துமூன்று நாயன்மார்கள் வீற்றிருக்கின்றனர். இங்கு அதிசய சண்முகர் சிலை உள்ளது. முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் இந்த சண்முகர் காட்சி தருகிறார். ‘‘முன்னொரு காலத்தில் பார்வதி தேவியின் தந்தையான தட்சன் தன்னலம் கருதி யாகம் ஒன்றை நடத்தினான். ஆனால் அந்த யாகத்திற்கு ஈசனின் உத்தரவை மீறி பார்வதி தேவி சென்றார். இதனால் அவர் மீது சிவபெருமான் கடும் கோபம் கொண் டார். தனது உத்தரவை மீறியதால் ‘தன்னை விட்டு பிரிந்து வாழக் கடவாய்’ என்று சக்திக்கு சாபமும் கொடுத்தார். பின்னர் சக்தியை விடுத்து, தனியாக இத்தலம் வந்து லிங்க உருவில் வில்வ மரத்தடியில் தங்கினார். இறைவனை பிரிந்த பார்வதி தேவி எங்கு தேடியும் அவரை காணாது துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது சிவபெருமான் அசரீரியாக, தான் பூலோகத்தில் வில்வ விருட்சத்தின் அடியில் சிவலிங்க திருமேனியாக இருப்பதாகவும், தம்மை சூரியன் தினமும் வழிபட்டு கொண்டிருப்ப தாகவும் கூறியுள்ளார். அதன்படியே பார்வதி தேவி, தனது தமையன் பெருமாளுடன் இந்த திருத்தலத்துக்கு வந்து இறைவனை வழி பட்டார். இறைவனும் அருள்பாலித்து சக்திக்கு தன்னுடலில் சரிபாதி தந்து மகிழ்ந்தார்,’’ என்பது தலவரலாறு. இந்திரனின் சாபத்தின் மாயையால் கவுதம முனிவர், தனது மனைவி அகலிகையை ‘கல்லாகக் கடவது’ என சாபமிட்டார். பிறகு அவர், சாப நிவர்த்திக்காக சிவபெருமானை வேண்டினார். அப்போது ஈசன், ‘ஏத்தாப்பூரில் சூரியன் என்னை வழிபடும் வேளையில் வந்து தரிசனம் செய்தால் நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாய்’ என்று திருவாய் மலர்ந்தார். அதன்படியே, கவுதமர் இந்த திருத்தலத்துக்கு வந்து சாம்பமூர்த்தீஸ்வரரை வணங்கி வழிபாடு செய்தார். அதன்படி ராமபிரானின் திருப்பாதம் பட்டு அகலிகை சாபவிமோசனம் பெற்றார் என்றும் தல வரலாறு கூறுகிறது.இதேபோல் சாம்பமூர்த்தீஸ்வரரை வழிபட்டால் சர்ப்ப தோ‌ஷம் நீங்கும், மகப்பேறு கிடைக்கும். குடும்ப பிரச்னைகள், நோய்கள் தீரும் என்பது தொடரும் நம்பிக்கை. கோயில் பிரகாரத்தில் உள்ள வில்வமரத்தை பிரிந்த தம்பதியர் வலம் வந்து வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவதுடன், சகல செல்வங்களுடன் வாழ்வார்கள் என்பது தொடரும் நம்பிக்கையாக உள்ளது. சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் லட்சுமி கோபாலபெருமாள் ஆலயம் இருக்கிறது. சிவபெருமானுடன், தனது தங்கையான பார்வதி தேவியை சேர்த்து வைப்பதற்காக பெருமாளும் அம்பாளுடன் இத்தலம் வந்தார். தங்கைக்காக சிவனை சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைக்க வந்ததால், இவர் ‘சமாதானப் பெருமாள்’ என்றும் அழைக்கப்படு கிறார். இந்த பெருமாளின் திருமேனிதான் தற்போது லட்சுமிகோபால பெருமாள் கோயிலில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணிஅவிட்டம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், தை பிரமோற்சவம், மாசிமகம், பங்குனிஉத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது….

The post வசிஷ்ட நதிக்கரையில் அருள்பாலித்து: சர்ப்பதோஷம் போக்கும் சாம்பமூர்த்தீஸ்வரர் கோயில் appeared first on Dinakaran.

Tags : Shambamurtheswarar Temple ,Pharadishtha ,Salem ,Salem district ,Ethapur ,Chambamurtheswarar Temple ,Aplingam ,Panchaputa Lingas ,Vishishtha River River ,Paradishiya ,Champamurtheswarar Temple ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...